Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான முதல்வரின் அறிவிப்பு இடஒதுக்கீடு கோரிக்கையை தாமதப்படுத்தும் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பது வன்னியர்களின் 20 சதவீத ஒதுக்கீடு கோரிக்கையை தாமதப்படுத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக, வன்னியர் சங்கம் சார்பில் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது வன்னியர்களின் 20 சதவீத ஒதுக்கீடு கோரிக்கையை தாமதம் செய்வதற்கான உத்தி ஆகும். இது மனநிறைவு அளிக்கவில்லை.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்காமல், ‘சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைப்போம்’ என்பதுஇந்த பிரச்சினையை கிடப்பில் போடும் செயல். இதற்கு அன்புமணிமற்றும் போராட்டக் குழுவினரை முதல்வர் அழைத்துப் பேசியிருக்கதேவையில்லை. காலம் தாழ்த்துவதற்கான இந்த அறிவிப்பை தன்னிச்சையாகவே வெளியிட்டிருக்கலாம்.

தவிர, வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயம் இல்லை. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உள்ள மக்கள்தொகை விவரங்களின் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்கலாம். கடந்த காலங்களில் முஸ்லிம்கள், அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடுகள் அவ்வாறுதான் வழங்கப்பட்டன.

எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைப்பது உடனேபயன் அளிக்காது. கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையை உடனே பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x