Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

மருத்துவப் படிப்புகளுக்கான தரிவரிசை பட்டியல் வெளியானதும் கலந்தாய்வு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று கூறியதாவது:

கரோனா காலத்தில் 108 ஆம்புலன்ஸ் சிறப்பாக பணியாற்றி வருகிறது. புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இணைக்கப்பட்டு வருவதால், மொத்த ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ரெஸ்பான்ஸ் நேரம் 8.01 நிமிடமாக உள்ளது. ஆம்புலன்ஸ் இருப்பிடத்தை ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் மக்கள் அறியும் வகையில், விரைவில் ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்படும்.

மருத்துவப் படிப்புகளுக்கு 34,424 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 4,061 மருத்துவ இடங்கள் உள்ளன. இது அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. திட்டமிட்டபடி தரவரிசைப் பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிடப்படும். ஓரிரு நாட்களில் கலந்தாய்வு தொடங்கப்படும். முதலில் சிறப்பு மாணவர்களுக்காகவும் பின்னர் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படியும் கலந்தாய்வு நடைபெறும்.

ஆண்டுதோறும் மருத்துவக் கலந்தாய்வு நேரடியாகத்தான் நடைபெறும். கரோனா காலமாக இருப்பதால், உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கம் போன்ற பெரிய இடங்களில் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். எம்பிபிஎஸ் இடங்களைப் பொறுத்தவரை 304 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கும். கடைசி நேரத்தில் எண்ணிக்கை கூடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. பிடிஎஸ் படிப்பில் 91 பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆள்மாறாட்டம் போன்றவை இனி நடக்காது. அனைத்து சான்றிதழ்களையும் நேரடியாக சோதிக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x