Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு நிகழ்ச்சி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் இன்று நடக்கிறது

சென்னை

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் மகாத்மா காந்தி நினைவு நாளான இன்றுதமிழகம் முழுவதும் 'மக்கள் ஒற்றுமை காக்கிறோம், வன்முறையை வேரறுக்கிறோம்' என்றுஉறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள்கூறியிருப்பதாவது:

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக ஒரு கோடி பேரைச் சந்திக்கும் மாபெரும் மக்கள் இயக்கம் குடியரசு தினத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 'மதநல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம்' எனும் துண்டறிக்கை ஒரு கோடி பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. இது காணொலி வடிவிலும் வெளியிடப்பட்டு சமூக ஊடகங்கள் வழியாக உலா வருகிறது. ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் பொய்ப் பிரச்சாரத்துக்கு சரியான பதிலடியாகத் திகழும் இவற்றுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஜனவரி 30 மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.மகாத்மா காந்தி மதநல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர். இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவ ஒற்றுமைக்காக உழைத்தவர். இந்தியாவின் வாழ்வுக்கும் வளத்துக்கும் மக்கள் ஒற்றுமையே அஸ்திவாரமாகும். காந்தி அகிம்சாமூர்த்தி. ஆனால் நாடெங்கும் கோட்சேயின் வாரிசுகள் அமைதி வாழ்வை நாசமாக்கி வருகிறார்கள்.

எனவே, மகாத்மாவின் நினைவு நாளில் மதநல்லிணக்கத்துக்கான துண்டறிக்கை விநியோகத்தோடு 'மக்கள் ஒற்றுமை காக்கிறோம், வன்முறையை வேரறுக்கிறோம்' எனும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக நடக்கும் இந்த நிகழ்வில் அதன் மாநில செயல்பாட்டுக்குழு உறுப்பினர்கள் வசந்தி தேவி, பீட்டர் அல்போன்ஸ், ஆ.கோபண்ணா, எம்.எச். ஜவாஹிருல்லா, கல்வியாளர் தாவூத் மியாகான், வன்னிஅரசு, அபுபக்கர் எம்எல்ஏ, தமிழன் பிரசன்னா, அருள்மொழி, தைமியா, சிக்கந்தர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x