Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

ஜவுளித் துறையை பாதுகாக்க மூடப்பட்ட பஞ்சாலைகளை திறக்க வேண்டும் பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறந்து அழிவிலிருந்து ஜவுளித் துறையைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நலிவடைந்த 14 தனியார் பஞ்சாலைகளை நிர்வாகம் செய்வதற்காக1968-ல் தேசிய பஞ்சாலை கழகம் (என்.டி.சி.) தொடங்கப்பட்டது. இந்திரா காந்தி 123 பஞ்சாலைகளை தேசியமயமாக்கி, என்.டி.சி.யின் கீழ் கொண்டு வந்தார். இதில் 100 பஞ்சாலைகள் நஷ்டம் ஏற்பட்டு மூடப்பட்டுள்ளன. 23 ஆலைகள் மட்டுமே தற்போது செயல்படுகின்றன. தென்னிந்தியாவில் மட்டும் 15 ஆலைகள் இயங்குகின்றன.

இந்நிலையில் கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு ஆலைகள் திறக்கப்படவில்லை. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள 7 ஆலைகளில் 3 மட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. நஷ்டம் எனக்கூறி, என்.டி.சி. நிர்வாகம், இந்த ஆலைகளையும் மூடிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

தேசியமயமாக்கப்பட்ட ஆலைகளின் இன்றைய சொத்து மதிப்பு ரூ. 50 ஆயிரம் கோடி. இதனை நிரந்தரமாக மூடுவதன் மூலம் பொதுத் துறை சொத்துக்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய பாஜக அரசுஎடுத்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்து அதிக அளவில் அதாவது4 கோடியே 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 2-வது பெரிய துறையாக ஜவுளித் துறை திகழ்கிறது. ஆனால், மத்திய பாஜகஅரசின் தவறான ஜவுளி கொள்கைகளால் ஜவுளித்துறை நலிவடைந்து காப்பாற்ற முடியாத சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடிக்கு தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால், அழிவின் விளிம்பில் இருக்கிற ஜவுளித் துறையைக் காப்பாற்றி,லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x