Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

ஓசூர் காப்புக்காடு வனவிலங்குகளின் தாகம் தணிக்க - தொட்டிகளில் மூன்றாம் கட்டமாக தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம் :

ஓசூர் வனச்சரக காப்புக்காடுகளில் வாழும் வனவிலங்குகளின் தாகம் தணிக்கும் வகையில் மூன்றாவது கட்டமாக சானமாவு காப்புக்காட்டில் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள இரண்டு தொட்டிகளில் தண்ணீர் நிரம்பும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனச்சரகத்தில் சானமாவு காப்புக்காடு, செட்டிப்பள்ளி காப்புக்காடு, கும்பளம்-1 காப்புக்காடு, கும்பளம் - 2 காப்புக்காடு, குலு காப்புக்காடு, சானமாவு விரிவாக்கம் காப்புக்காடு உட்பட 12 காப்புக்காடுகள் அமைந்துள்ளன. இக்காடுகளில் வாழும் யானை, சிறுத்தை, காட்டெருமை, புள்ளிமான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக நடப்பாண்டு கோடைகால ஆரம்ப நிலையில் முதல் கட்டமாக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள இரண்டு பெரிய தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து வனப்பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக வறட்சி நிலவி வருவதால் வனவிலங்குகளின் தாகம் தணிக்கும் வகையில் 3 கட்டமாக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் வனச்சரகர் ரவி கூறுகையில், நடப்பாண்டில் ஓசூர் வனச்சரகத்தில் கடும் வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டு வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கோடை மழையும் நீர் நிலைகளை நிரப்பும் அளவுக்கு போதுமானதாக இல்லை. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியே செல்வதை தடுக்கும் வகையில் மூன்றாம் கட்டமாக சானமாவு காப்புக்காட்டில் உள்ள சுமார் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 பெரிய தொட்டிகளிலும் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரம்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வனவிலங்குகளின் தாகம் தணிக்க கோடை காலம் முடியும் வரை அனைத்து காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்பும் பணி தொடர்ந்து நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x