Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

கிரண்பேடியைத் திடீரென்று சந்தித்து மனு அளித்த திமுக அமைப்பாளர்கள் மக்கள் பிரச்சினைகளுக்காகச் சந்தித்ததாக தகவல்

புதுச்சேரி ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு அளிக்கும் திமுக அமைப்பாளர்கள் சிவக்குமார், நாஜிம், சிவா எம்எல்ஏ.

புதுச்சேரி

புதுச்சேரி அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவினர் திடீரென ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். மக்கள் பிரச்சினைக்காக ஆளுநரை சந்தித்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி மாநில திமுக அமைப் பாளர்கள் சிவா எம்எல்ஏ (தெற்கு), எஸ்.பி.சிவக்குமார் (வடக்கு), நாஜிம் (காரைக்கால்) ஆகியோர் நேற்று முன்தினம் சென்னை சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் புதுச்சேரி ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மூவரும் கூட்டாக சந்தித்து மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உடனே தர உத்தரவிட வேண்டும். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அமைச்சரவை முடிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஏஎப்டி, சுதேசி, பாரதி மில்லில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணத்தை வழங்க வேண்டும், மூடியுள்ள அந்நிறுவனங்களை திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். பாப்ஸ்கோ, பாசிக், அமுதசுரபி, குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்.

கரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். குப்பை வரியை ரத்து செய்யவேண்டும். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ஒதுக்கித்தர வேண்டும். லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கலை ஆலையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, அதை உடனே இயக்க வேண்டும்.

தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள காவலர் தேர்வை நடத்த வேண்டும். அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக ரேஷன் கடைகளை திறந்து மக்களுக்கு இலவச அரிசியை நேரடியாக வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர் நிலுவை ஊதியத்தையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “துணைநிலை ஆளுநரை முதல்வர், அமைச்சர்கள் சந்திக்க மாட்டார்கள் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற ஆளுநரை சந்தித்து பேசினோம். காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆளுநரை சந்தித்ததற்கும் சம்பந்தம் இல்லை” என்று குறிப்பிட்டனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 17-ம் தேதி சென்னையில் புதுச்சேரி திமுக நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டறிய உள்ளார். இந்நிலையில் துணைநிலை ஆளுநரை இவர்கள் சந்திருப்பது கட்சி வட்டாரத்தில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x