Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

தும்பலஅள்ளி இலங்கைத் தமிழர் முகாமில் தொடர் கரோனா பரவலால் அச்சம் : அடிப்படை வசதி, சுகாதாரம் மேம்படுத்த கோரிக்கை

தருமபுரி மாவட்டம் தும்பலஅள்ளி இலங்கை தமிழர் முகாமில் அமைந்துள்ள வீடுகள்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் தும்பலஅள்ளி இலங்கை தமிழர் முகாமில் தொடர் கரோனா பரவலால் முகாம் வாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் தும்பலஅள்ளி அணையை ஒட்டி இலங்கை தமிழர் முகாம் அமைந்துள்ளது. இங்கு, 200 குடும்பங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் சிலருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. எனவே, கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஒருமுறையும், கடந்த 6-ம் தேதி ஒருமுறையும் என 2 முறை கரோனா கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளது. இவ்விருமுகாம்களிலும் 100 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், 13 நபர்களுக்கு இதுவரைகரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இவர்களில் 4 பேர்சிகிச்சை முடிந்து குணமடைந்து விட்டனர். 6 பேர் சில நாள்சிகிச்சைக்கு பின்னர் வீட்டிலேயேதனிமைப்படுத்திக் கொண்டுள்ள னர். மீதமுள்ள 3 பேர் சிகிச்சைக்கு சேர இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முகாமைச் சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, ‘முகாமில் 200 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீடும் 17க்கு 10 அடி அகலம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. இந்த வீடுகளிலேயே 700-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கி றோம். முகாம் மக்களின் தேவைக்காக 10 பொதுக் கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளன. அவை போதிய அளவில் இல்லாததாலும், சுகாதாரமின்றி இருப்பதாலும் சுமார் 100 வீடுகளில் சொந்த செலவிலேயே சிறிய கழிப்பறைகளை அமைத்துக் கொண்டனர். மீதமுள்ள வீட்டில் வசிப்பவர்கள் அருகிலுள்ள திறந்த வெளியைத் தான் கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். எங்கள் முகாமில் வசிப்பவர்கள் கோவை, சென்னை, பெங்களூரு, கேரளா என பல்வேறு ஊர்களுக்கு வேலைக் காக சென்று திரும்புவோம். அதன் மூலமாகவோ அல்லது பொதுவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் வகையிலோ எங்கள் முகாமில் இருப்பவர்களுக்கு கரோனா ஏற்பட்டுள்ளது. 700-க்கும் அதிகமானோர் மிக நெருக்கமான இடத்தில் வசிப்பதால் மற்றவர் களுக்கும் தொற்று வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக முகாம் வாழ் மக்கள் அச்சத்தில் உள்ளோம். எனவே, முகாம் மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதன் முடிவுகளை விரைவாக தெரிவித்து, பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தால் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும். முகாம் பகுதியில் முழுமையாக கரோனா பரவலை கட்டுப்படுத்தவும் முடியும். இதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தும்பலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவரான வழக்கறிஞர் கோவிந்தராஜிடம் இதுபற்றி கேட்டபோது, ‘தும்பலஅள்ளி இலங்கைத் தமிழர் முகாமில் 10 பேர் வரைகரோனாவால் பாதிக்கப்பட்டிருப் பது உண்மை தான்.

அங்கு அடிப்படை வசதிகளும், சுகாதாரமும் போதியஅளவில் இல்லை. எங்கள் ஊராட்சி மன்றம் நிதி நெருக்கடியில் இருப்பதால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அத்தியாவசிய சேவைகளையே செய்ய முடியாமல் திணறுகிறோம். எனவே, இலங்கை தமிழர் முகாம் பகுதியின் அவல நிலை குறித்தும், அதை மேம் படுத்தக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கரோனா தீவிரமாக பரவி வரும் இந்த சூழலிலாவது இலங்கை தமிழர் முகாமில் அடிப்படை வசதிகளையும், சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x