Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு

விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணாவை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நேற்று 15-வது நாளாக நீடித்தது.

கடந்த 8-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாய சங்கங்களின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப 3 வேளாண் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்ய எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்கப்பட்டது. இதை விவசாயிகள் ஏற்கவில்லை.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நாளை மறியலில் ஈடுபடுவோம். வரும் 14-ம் தேதி மீண்டும் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு, விவசாயிகள் இடையே இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. இதில் விவசாய சங்கங்கள் பங்கேற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் நேற்று முன்தினம் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்வது தொடர்பாக 22 பக்கங்கள் அடங்கிய எழுத்துப்பூர்வ உறுதிமொழிகளை விவசாயிகளுக்கு அளித்துள்ளோம். இவற்றை பரிசீலிக்க வேண்டும். விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.

விவசாயிகளின் நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பெரும்பான்மையான விவசாய சங்கங்கள், வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளன. சில விவசாய சங்கங்கள் மட்டுமே சந்தேகம் எழுப்பியுள்ளன. அந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க அரசு தயாராக உள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் நிறுத்தப்படாது என்று மீண்டும் உறுதி அளிக்கிறேன். குஜராத், மகாராஷ்டிரா, ஹரியாணா, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒப்பந்த பயிர் சாகுபடி திட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. இந்த நடைமுறையால் விவசாயிகளின் நில உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காகவே வேளாண் துறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்த புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. எனவே, டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும்.

தனியார் சந்தையில் வேளாண் விளைபொருட்களை விற்க விவசாயிகள் நிர்பந்தம் செய்யப்படுவார்கள் என்று வதந்தி பரப்பப்படுகிறது. இதை நம்ப வேண்டாம். வேளாண் விளைபொருட்களை மத்திய அரசு வழக்கம்போல கொள்முதல் செய்யும். விவசாயிகளின் நலன்களை மத்திய அரசு பாதுகாக்கும். கொரோனா வைரஸ், குளிர்காலத்தை கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாரதிய கிசான் சங்க தலைவர் பல்பீர் சிங் கூறும்போது, "மத்திய அரசு விவசாயிகளுக்காக வேளாண் சட்டங்களை இயற்றவில்லை. வியாபாரிகளுக்காக சட்டங்களை இயற்றியுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

விவசாய சங்க மூத்த தலைவர் பூட்டா சிங் கூறும்போது, "எங்களது கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x