Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீட்டிப்பு : அவசரச் சட்டம் பிறப்பித்தது மத்திய அரசு

சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்தது. இந்த இரு அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க வகை செய்யும் அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

டெல்லி சிறப்பு போலீஸ் நிர்வாக சட்டத்தின் பிரிவு 4பி-ல் சிபிஐ இயக்குநரின் பதவிக் காலம் உள்ளிட்ட வரையறைகள் உள்ளன. இந்த பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல மத்திய ஊழல் ஆணைய சட்டம் பிரிவு 25-ல் அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலம் உள்ளிட்ட வரையறைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பதவி நீட்டிப்பின்போது ஓராண்டு மட்டுமே பதவிக் காலத்தை நீட்டிக்கவேண்டும். எதற்காக, என்ன காரணத்துக்காக பதவிக் காலம் நீட்டிக்கப்படுகிறது என்பதை எழுத்துபூர்வமாக பதிவு செய்ய வேண்டும். சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கக்கூடாது என்று அவசரச் சட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசரச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இரு சட்டங்களும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் ஏற்கெனவே ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோரை கொண்ட அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது. எனினும், அரிதான, அசாதாரண சூழல்கள் தவிர்த்து அமலாக்கத் துறை இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்தச் சூழலில் அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் நவம்பர் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் மூலம்அவரது பதவி காலத்தை மேலும் நீட்டிக்க முடியும். இதேபோல தற்போதைய சிபிஐ இயக்குநர் சுபோத் குமாரின் பதவிக் காலத்தையும் நீட்டிக்க முடியும்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் வஸ்தவா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசுஅவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அடுத்ததாக பிரதமர் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கும் அவசரச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வரலாம். பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம், சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை கூட்டணிஅமைத்து ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி நடக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பதிவில், ‘கண்காணிப்பை தவிர்க்க சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரைன், ‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறிசிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்’ என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x