Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

பிஹாரில் 2 துணை முதல்வர்கள், 12 அமைச்சர்களுடன் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு மாநில வளர்ச்சிக்கு உதவுவதாக உறுதிபிரதமர் மோடி வாழ்த்து

பிஹார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்வர்களும், 12 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

புதிய அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாநில வளர்ச்சிக்குத் தேவையான உதவி களை மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. கடந்த 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும் பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய ஆளும் தேசிய ஜன நாயக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. எதிரணியான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு 110 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.

பிஹார் தலைநகர் பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மாலையே அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து புதிய அமைச் சரவை பதவியேற்பு விழா, பாட்னாவில் நேற்று நடந்தது. முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார். அவ ருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பது இது 7-வது முறை யாகும். தொடர்ந்து 4-வது முறையாக அவர் முதல்வராகியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர்கள் தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, விஜேந்திர பிரசாத் யாதவ், அசோக் குமார் சவுத்ரி, மேவா லால் சவுத்ரி, ஷீலா மண்டல் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு முதல்வர் நிதிஷ்குமார் உட்பட 6 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பாஜகவைச் சேர்ந்த மங்கள் பாண்டே, அமரேந்திர பிரதாப் சிங், ராம்பிரித் பாஸ் வான், ஜிவேஸ் மிஸ்ரா, ராம் சூரத் ராய் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 2 துணை முதல் வர்கள் உட்பட அமைச்சரவையில் பாஜக வுக்கு 7 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

சிறிய கட்சிகளுக்கு இடம்

கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, விகாஸ்சீல் இன்சான் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டது. ஜிதன்ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ் மாஞ்சி, விகாஸ்சீல் இன்சான் கட்சியின் தலை வர் முகேஷ் சகானி இருவரும் அமைச் சராக பதவியேற்று கொண்டனர். முதல்வர் நிதிஷ் குமாரையும் சேர்த்து பிஹார் அமைச்சரவையில் 15 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கான இலா காக்கள் அறிவிக்கப்படவில்லை.

பதவியேற்பு விழாவில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட கட்சி யின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடிக்கு இந்த முறை துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. அவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 74 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத் துக்கு 43 இடங்கள் மட்டுமே கிடைத்தன. எனினும் ஏற்கெனவே அளித்த வாக்கு றுதியின்படி நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. பாஜக சார்பில் 2 துணை முதல்வர்கள் பதவி யேற்றுள்ளனர். சபாநாயகர் பதவியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்று தெரி கிறது.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘பிஹார் முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள். புதிய அமைச்சர் களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிஹாரின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம் ஒன்றிணைந்து பாடுபடும். அதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்’ என்று உறுதி அளித்துள்ளார்.

இதேபோல் தமிழக முதல்வர் பழனிசாமியும் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தலைவர்கள் பதவி யேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அந்த கட்சி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘பிஹாரில் ஆட்சி மாற்றத்துக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் செய்து தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டோம். நாங்கள் மக்களின் பிரதிநிதிகள். மக்களோடு இருப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான காங்கிரஸும் பதவியேற்பு விழாவை புறக்கணித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x