Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுத வசதி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு இனி தமிழ் உட்பட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலை தேர்வானது இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் ஆண்டுக்கு 2 முறை ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத் தப்படும்.

இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தற்போதைய கரோனா தொற்று சூழலில் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வை ஆண்டுக்கு 4 முறை நடத்தவும், மாநில மொழிகளில் வினாத்தாள் வடிவமைக்கவும் மாணவர்கள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதையேற்று நீட் தேர்வைப் போல ஜேஇஇ முதல்நிலைத் தேர்வும் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:

பிப்., மார்ச், ஏப்., மே மாதங்களில்...

நடப்பு கல்வியாண்டு முதல் ஜேஇஇ முதல்நிலை தேர்வு ஆண்டுக்கு 4 முறை அதாவது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தேர்வுகள் கணினிவழியில் நடைபெறும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது 4 முறை தேர்வை எழுதலாம். அதில் மாணவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.

முதல்கட்ட ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு பிப். 23 முதல் 26-ம்தேதி வரை நடத்தப்படும். தேர்வு முடிந்த 4 அல்லது 5 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்படும்.

பிஆர்க் தவிர்த்து இதர பொறியியல் படிப்புகளுக்கு கணினிவழியில் தேர்வு நடத்தப்படும். இதுதவிர ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு இனி தமிழ், மலையாளம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். அதேநேரம் பாடத்திட்டத்தில் எவ்விதமாற்றங்களும் இல்லை.

ஜேஇஇ தேர்வை மாநில மொழிகளில் நடத்துதல் உள்ளிட்ட மாற்றங்கள் மூலம் மாணவர்கள் கேள்விகளை சிறப்பாக புரிந்து கொள்வதுடன், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் வழிவகை ஏற்படும்.

இவ்வாறு ரமேஷ் பொக்ரியால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x