Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

சுரானா நிறுவனத்திடம் இருந்து சிபிஐ பறிமுதல் செய்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ மாயமானது எப்படி? சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சுரானா நிறுவனத்திடம் இருந்து சிபிஐ அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் சீல் வைக்கப்பட்ட 400.47 கிலோ கிராம் தங்கத்தில் 103.864 கிலோ கிராம் தங்கம் மாயமானது எப்படி என்பது குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் லிமிட்டெட் என்றதங்க ஆபரண நகைகள் விற்பனைநிறுவனத்துக்காக விதிகளை மீறிஇந்திய மினரல்ஸ் மற்றும் மெட்டல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டுள்ளதாகக் கூறி சிபிஐ கடந்த 2012-ம் ஆண்டு ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

பின்னர் சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள சுரானாநிறுவனத்தில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் 400.47 கிலோ கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துஅங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் சுரானா நிறுவன ஊழியர்கள்மற்றும் சாட்சிகள் முன்னிலையில் சீல் வைத்து 72 சாவிகளை சிபிஐநீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சிபிஐ நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ கிராம் தங்கம், விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக சுரானா நிறுவன ஊழியர்கள் மீது கடந்த 2013-ல் சிபிஐ 2வது முறை வழக்குப்பதிவு செய்தது. இரண்டாவது வழக்கில் அந்நிறுவனம் விதிகளை மீறவில்லை எனக்கூறி சிபிஐ வழக்கை முடித்து வைத்துள்ளது.

இதற்கிடையே சுரானா நிறுவனம் ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பலதரப்பட்டவங்கிகளில் ரூ.1,160 கோடி அளவுக்கு கடன் பெற்று அதை முறையாக திருப்பி செலுத்தவில்லை என்பதால் அந்நிறுவனத்துக்கு எதிராக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி சுரானா நிறுவனத்தின் கலைத்தல் அதிகாரியாக சி.ராமசுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டு, ஏற்கெனவே சிபிஐ சார்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 400.47கிலோ கிராம் தங்கத்தை வங்கிகளிடம் பெற்ற கடனுக்காக ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம் மாயமானதால் அதிர்ச்சி

அதன்படி கடந்த பிப்.27 முதல்பிப்.29 வரை சுரானா நிறுவனத்தில் சிபிஐ சீல் வைத்த பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து பார்த்தபோது அதில் 296.606 கிலோ கிராம் தங்கம் மட்டுமே இருந்துள்ளது. 103.606 கிலோ கிராம் தங்கம் திடீரென மாயமானதால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரி சி.ராமசுப்பிரமணியம், மாயமான 103.606 கிலோ கிராம் தங்கத்தை சிபிஐ ஒப்படைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி யிருப்பதாவது:

இந்த குற்றச்சம்பவம் ஹாலிவுட்படத்தை மிஞ்சும் அளவுக்கு நடந்துள்ளது. 400.47 கிலோ கிராம்தங்கம் இருந்ததாக தவறுதலாகமிஷின் எடையைக் காட்டியிருக்கலாம் என்றும் உண்மையில் 296கிலோ கிராம் மட்டுமே இருந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளதை ஏற்கமுடியாது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ கிராம் தங்கம் மாயமாகி இருப்பது என்பதுசிபிஐ மீதும் அந்த நிறுவனத்தின் மீதும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் ஒன்றும் காலத்தால் எடை குறையும் உலோகம் கிடையாது.

சிபிஐக்கு அக்னிபரீட்சை

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ-க்கு எதிராக உள்ளூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டால் அது சிபிஐ மீதான கவுரவத்தை குலைத்துவிடும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தின் அனைத்து சாவிகளும் சிபிஐ வசம்இருக்கும்போது தங்கம் மாயமாகியுள்ளது. இது சிபிஐ-க்கு அக்னிபரீட்சை போன்றது. இதில் யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

எனவே, இந்த மிகப்பெரிய திருட்டு சம்பவம் தொடர்பாக சென்னை சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரித்து 6 மாதத்தில் இதுதொடர்பாக இறுதி அறிக் கையை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x