Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

நிபா வைரஸால் 12 வயது சிறுவன் உயிரிழப்பு : கேரள மாநிலம் விரைந்தது மத்திய மருத்துவர் குழு

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளான 12 வயது சிறுவன் உயிரிழந்தான். நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள மத்திய அரசின் மருத்துவக் குழுவினர் கேரளா சென்றுள்ளனர்.

கேரளாவில் கரோனா வைரஸ்பரவலின் 2-வது அலையின் தாக்கமே இன்னும் குறையவில்லை. இந்நிலையில், வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான 12 வயது சிறுவன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் உயிரிழந்த தகவலை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணாஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீணா ஜார்ஜ் கூறியதாவது:

நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த 4 நாட்களாக அந்த சிறுவனுக்கு தொடர்ந்து அதிகமான அளவு காய்ச்சல் இருந்தது. அந்தசிறுவனின் உடலில் இருந்து ரத்தமாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அந்த சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அந்த சிறுவனுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு, தேடப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

அந்த சிறு வனுடன் நெருக்கமாக இருந்த உறவினர்கள் யாருக்கும் இதுவரை எந்த அறிகுறியும் இல்லை. மற்ற குழந்தைகளுக்கும் அறிகுறி ஏதுமில்லை. மாநிலசுகாதாரத் துறையினர் தொடர்ந்துநிலைமைகளைக் கண்காணித்து வருகின்றனர். நிபா வைரஸைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளும், சிறப்புக் குழுக் களும் நியமிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

2 பேருக்கு வைரஸ் அறிகுறி

சிறுவனுடன் தொடர்பில் இருந்த 188 பேர் அடையாளம் காணப்பட்டு, வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ள 20 பேர் தனியாகக் குறிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் சுகாதாரப் பணியாளர்கள். ஒருவர் தனியார் மருத்துமனையிலும் மற்றொருவர் கோழிக்கோடு மருத்துவமனையிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தனிமைப்படுத் தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மத்திய சுகாதாரத்துறையின் தேசிய நோய் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த குழுவினர் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். நிபா வைரஸ் பர வாமல் தடுக்க மாநில சுகாதாரத் துறையினருக்குத் தேவையான அறிவுரைகள், வழிகாட்டல்களை மத்திய குழுவினர் வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 17 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x