Published : 15 Jul 2021 03:12 AM
Last Updated : 15 Jul 2021 03:12 AM

பாகிஸ்தானில் பஸ் வெடித்ததில் 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு : தீவிரவாத சதியா என போலீஸார் விசாரணை

பாகிஸ்தானில் நேற்று பஸ் வெடித்ததில், அணை கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தீவிரவாத சதியா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் ஹசரா பகுதியில் உள்ள தாசு அணை கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீர் மின் உற்பத்தி நிலையமும் நிர்மாணிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சீன பொறியாளர்கள், பாகிஸ்தான் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பொறியாளர்கள், நில அளவையாளர்கள் மற்றும் இயந்திரவியல் ஊழியர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்ஸில் கட்டுமானப் பணி நடைபெறும் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ் திடீரென வெடித்தது.

இதுகுறித்து மாகாண காவல் துறை உயர் அதிகாரி மோஜம் ஜா அன்சாரி கூறும்போது, “பஸ் வெடித்ததில் சீனாவைச் சேர்ந்த 9 பேர், 2 வீரர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். சாலையோரம் இருந்த வெடிபொருள் வெடித்ததா அல்லது பஸ்ஸில் வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்ததா எனத் தெரியவில்லை. இது தீவிரவாத சதித் திட்டமா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பஸ் வெடித்ததும் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்” என்றார்.

இதுகுறித்து பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சீன நிறுவனத்தால் பாகிஸ்தானில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 9 சீனர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் பணிபுரியும் சீனர்களின் பாதுகாப்பு எப்போதுமே கேள்விக்குறியாக உள்ளது. எனவே சீனர்களின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பலப்படுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x