Published : 15 Feb 2021 03:11 AM
Last Updated : 15 Feb 2021 03:11 AM

வீட்டுக்கு முன் தண்ணீர் தேங்குவதாக ட்விட்டரில் வருத்தம் மணப்பெண் குறை தீர்த்துவைத்த ஹரியாணா அரசு

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் நகரைச் சேர்ந்தவர் காமினி. இவருக்கு வரும் 16-ம் தேதி (நாளை) திருமணம் நடைபெறவுள்ளது. இதனால், அவரது வீட்டுக்கு ஏராளமான உறவினர்கள் வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவரது வீட்டின் முன்பாக உள்ள சாலை முழுவதும் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, உறவினர்கள் வருவதிலும், திருமண வேலைகளுக்காக வெளியே சென்று வருவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஃபரிதாபாத் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 10-ம் தேதி காமினி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தாம் எதிர்கொள்ளும் சிரமங்களை விளக்கியிருந்த அவர், கழிவு நீர் தேங்கியிருந்த புகைப்படத்தையும் இணைத்திருந்தார். இந்நிலையில், இந்தப் பதிவானது ஹரியாணா அரசின் சமூக வலைதள குறைதீர் குழுவின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட அந்தக் குழுவினர், இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், இரண்டே நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து கழிவு நீர் அகற்றப்பட்டு கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

இந்த செய்தியானது வலைதளங்களில் வைரலானதால் ஹரியாணா அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x