Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

முதல் டெஸ்டில் அஸ்வின் 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தல் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸி. அணி

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது இந்திய அணி.

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, மேற்கொண்டு 11 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 93.1 ஓவர்களில் 244 ரன்களுக்கு முடிவடைந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க வீரர்கள் மேத்யூ வேட் (8), ஜோ பர்ன்ஸ் (8) ஆகியோர் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் (1), டிரெவிஸ் ஹெட் (7), மேகரூன் கிரீன் (11) ஆகியோரை வெளியேற்றினார் அஸ்வின்.

விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்க டிம் பெயின் அவ்வவ்போது பவுண்டரிகள் அடித்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். 68 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 8-வது அரை சதத்தை அடித்தார் பெயின்.

72.1 ஓவர்களில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி. டிம் பெயின் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 3 விக்கெட்கள் 79 ரன்கள் சேர்த்ததால் மிகக்குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தது ஆஸ்திரேலி அணி. இந்திய அணி சார்பில் அஸ்வின் 4, உமேஷ் யாதவ் 3, ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 53 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது.

பிரித்வி ஷா 4 ரன்களில் பாட் கம்மின்ஸ் பந்தை தடுத்தாட முயன்ற போது போல்டானார். இதையடுத்து பும்ரா களமிறக்கப்பட்டார். நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 5, பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி கைவசம் 9 விக்கெட்கள் இருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x