Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM

எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை - தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளை கண்டறிந்து அதை செயல்படுத்த, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதிமேம்பாட்டு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து அப்பணிகளை இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்த பரிந்துரைப்பார்கள். இத்திட்டம் 234 தொகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டது

கடந்த 2016-17-ம் ஆண்டு வரை ரூ.2 கோடியாக இருந்த சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை கடந்த 2017-18 முதல் ரூ.2.50கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது. 2020-21 நிதியாண்டில் ரூ.3 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

தொகுதி மேம்பாட்டு நிதி,ஆண்டுதோறும் ஜூன், ஜூலைமாதங்களிலேயே விடுவிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை நேரடியாக பெற்று உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை அந்தந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவர். இந்த ஆண்டு டிசம்பர் மாதமே பிறந்துவிட்டது. ஆனால், 2021-22 நிதியாண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இந்த அரசு இதுவரை விடுவிக்கவில்லை.

இதுகுறித்து விசாரித்ததில், இந்த ஆண்டு இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளதாகவும், இப்போது தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவித்தால் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிதியைபயன்படுத்தி மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவார்கள். அதனால், ஆளுங்கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் நிதியை விடுவிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்துக்குள் விடுவிக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை இதுவரை விடுவிக்காமல் இருப்பது அரசின் தீய எண்ணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. இத்தகைய செயல்கள் மூலம்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிகார துஷ்பிரயோகம், அதிகாரிகள் துணையுடன் வெற்றி பெற ஆளுங்கட்சியினர் திட்டமிட்டிருப்பது தெளிவாகியுள்ளது.

எனவே, இனியும் தாமதம் செய்யாமல் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அரசை வலி யுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x