Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

புதுச்சேரி காங்கிரஸில் குழப்பம்ராகுல் கூட்டத்துக்கு தமிழக தொண்டர்கள் அணிதிரள வேண்டும்தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுபெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்துக்கு தமிழகத்திலிருந்து தொண்டர்கள் அணி திரளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் தமிழகத்தில் 5 கட்டங்களாக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி, முதல் கட்டமாக கடந்த ஜனவரி 14-ம் தேதி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வருகை தந்தார். பொங்கல் விழாவிலும் பங்கேற்றார்.

2-ம் கட்டமாக ஜனவரி 23, 24, 25 தேதிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார்.

3-வது கட்டமாக பிப்ரவரி 27, 28, மார்ச் 1 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 5 தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணங்களின்போது பல்வேறு தரப்பினர்களை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடி வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தோடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரிக்கு இன்று ராகுல் காந்தி வருகிறார். ரோடியர் மில் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேச இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நமச்சிவாயம் உள்ளிட்ட இரு எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிய நிலையில் நேற்று முன்தினம் மேலும் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்தது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில் ராகுலின் காந்தி பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ் மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் குழப்பத்தில் இருப்பதால் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்புதமிழக காங்கிரஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு தமிழகத்திலிருந்து தொண்டர்கள் அணி திரள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிப்.17-ம் தேதி (இன்று) புதுச்சேரிக்கு வருகிறார். மாலை 3 மணிக்கு ரோடியர் மில் மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். தமிழகமும், புதுச்சேரியும் வெவ்வேறு மாநிலங்களாக இருந்தாலும் மக்களின் வாழ்க்கை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாகும். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை சீர்குலைக்க கடந்த 5 ஆண்டுகளாகவே முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆளுநர் கிரண்பேடியால் எடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இவற்றையெல்லாம் புதுச்சேரி காங்கிரஸ் முறியடித்து ஆட்சியை பாதுகாத்து வந்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் புதுச்சேரி வருகை காங்கிரஸாருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் நடக்கும் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x