Published : 12 Jan 2023 04:02 PM
Last Updated : 12 Jan 2023 04:02 PM

போலிச் செய்திகள் அலர்ட் - 6 யூடியூப் சேனல்களைக் கண்டறிந்த மத்திய அரசு

பிரதிநிதித்துவப் படம்

புது டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையை கண்டறியும் பிரிவு, நடத்திய ஆய்வில் 6 யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைந்து தவறான தகவல்களை பரப்பியதை கண்டுபிடித்துள்ளது. இதற்கென 6 தனி ட்விட்டர் கணக்குகளை கையாண்டு சேனல்களில் தவறான தகவல் பரப்பலை இந்தப் பிரிவு முறியடித்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில் இதுபோன்ற ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத்தன்மை கண்டறியும் பிரிவு நடத்திய ஆய்வில் 3 யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியது கண்டறியப்பட்டது.

நேஷன் டிவி, சம்வாட் டிவி, சரோகர் பாரத், நேஷன்-24, ஸ்வர்னிம் பாரத், சம்வாட் சமாச்சார் ஆகிய இந்த 6 யூடியூப் சேனல்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி 20 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருப்பதும். அவர்கள் 51 கோடிக்கும் அதிகமான முறை இந்த தவறான தகவல்களைக் கொண்ட வீடியோக்களை பார்த்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சேனல்கள், தேர்தல், உச்ச நீதிமன்ற விசாரணை, மத்திய அரசு ஆகியவை குறித்த உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியிருக்கின்றன. உதாரணமாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை, குடியரசுத்தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெயரிலான அறிக்கைகள் என்ற பெயரில் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x