Published : 04 Apr 2024 08:43 AM
Last Updated : 04 Apr 2024 08:43 AM

AI சூழ் உலகு 17 - ‘டீப்ஃபேக் வீடியோ, வாய்ஸ் குளோனிங்’ - இது தேர்தல் கால அச்சுறுத்தல்

ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள சுமார் 60 நாடுகளில் 2024-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவிலும் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் களத்தில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’ என கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. கூடவே எதிர்க்கட்சிகளை விமர்சித்தும் வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் ஓரணியாக இணைந்து கூட்டணி அமைத்துள்ள வியூகம் தொடங்கி கச்சத்தீவு விவகாரம் வரை வைரலாக விவாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) அசுர வளர்ச்சி தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள், கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை சற்றே கவலையடையச் செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையமும் போலிச் செய்திகள் மற்றும் தவறான உள்நோக்கம் கொண்ட தகவல்களை விரைந்து அடையாளம் காண்பது அவசியம் என தெரிவித்துள்ளது. அந்த அளவுக்கு ஏஐ துணை கொண்டு உருவாக்கப்படும் டீப்ஃபேக் வீடியோ (போலி வீடியோ), வாய்ஸ் குளோனிங் ஆடியோ கன்டென்டுகள் இந்த தேர்தலில் தனது சித்து விளையாட்டை காட்டும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் கடந்த 30 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட உதாரணங்களும் உள்ளன. 1990-களில் தொலைபேசி வழியில் தொடங்கி 2014 தேர்தலில் ஹாலோகிராம் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது தேர்தல் களம் ஏஐ காலத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக ‘மக்களவைத் தேர்தல் - 2024’ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

டீப்ஃபேக் வீடியோ, வாய்ஸ் குளோன் ஆடியோ: புதிய மதுபான கொள்கை தொடர்பாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், சிறையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களுக்காக பகிர்ந்த தகவலை அவரது குரலில் குலோன் செய்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. “வாழ்நாள் முழுவதும் சிறந்த சமுதாயத்துக்காக போராடுகிறேன்” என சொல்லி இருந்தார்.

இது மாதிரியான டீப்ஃபேக் வீடியோ மற்றும் குளோன் செய்யப்பட்ட ஆடியோக்கள் தற்போது அதிகம் காண முடிகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசும் வீடியோ, தமிழில் ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் என அந்த பட்டியல் நீள்கிறது.

ஆரம்பத்தில் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்காக, பிறகு பொழுதுபோக்குக்காக என பயணித்த டீப்ஃபேக் நுட்பம் இப்போது வில்லனாக உருமாறி மிரட்டுகிறது. தனிமனித தாக்குதல் தொடங்கி பல்வேறு வகையிலான எதிர்வினைகளை இது ஏற்படுத்துகிறது. உலக மக்களுக்கு புகைப்படத்தில் மட்டுமே அறிமுகமான நபரையும் இதன் மூலம் பேச வைக்கலாம். இதன் கன்டென்டுகள் அசல் போல இருப்பதே இதற்கு பிரதான காரணம்.

டீப்ஃபேக் வீடியோ மற்றும் வாய்ஸ் குளோனிங் ஆடியோக்கள் தேர்தலில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் என டெல்லி காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வகை கன்டென்ட்களை விரைந்து அடையாளம் காண்பது மற்றும் தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுப்பது சவாலான காரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக அசல் மற்றும் ஏஐ போலி வீடியோக்களை வகைப்படுத்த எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாத நிலையில் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே அது சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு, தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் அதிர்வலை: அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் 2024 ஜனவரியில் நடைபெற்ற முதன்மை தேர்தலில், வாக்காளர்கள் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் அந்த நாட்டு அதிபர் பைடனின் குரல் குளோன் செய்யப்பட்டு இருந்தது. அது பகிரப்பட்டும் இருந்தது. இந்த வேலையை யார் செய்தது என்பது விசாரணையில் உள்ளது.

ஸ்லோவாக்கியா நாட்டில் முக்கிய வேட்பாளர் ஒருவரது குரல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதன் கன்டென்ட் சமூக வலைதளங்களில் கவனமும் பெற்று இருந்தது. மதுபானங்களின் விலையை உயர்த்துவது மற்றும் தேர்தலில் மோசடி மேற்கொள்வது குறித்து அதில் பேசப்பட்டு இருந்தது.

இதேபோல கடந்த 2023-ல் நடைபெற்ற நைஜீரிய நாட்டு அதிபர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளை கையாளும் திட்டம் குறித்து வேட்பாளர் ஒருவர் பேசும் ஆடியோவும் கவனம் பெற்றிருந்தது. அண்டை நாடான வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரூமின் ஃபர்ஹானா பிகினி உடையில் அணிந்திருப்பது மற்றும் நிபுன் ராய் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற டீப்ஃபீக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்தன. பாகிஸ்தானிலும் இதே போக்கு இருந்தது. சம்மந்தப்பட்டவர்கள் அது நாங்கள் இல்லை என தன்னிலை விளக்கமும் கொடுத்திருந்தனர்.

இத்தகைய சூழலில் உலக அளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் வசிக்கும் நாடாக உள்ள இந்தியாவில் இது போன்ற ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ கன்டென்ட் களத்தில் வேட்பாளர்களின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும். அதோடு இந்த வகையான கன்டென்ட்களை பார்க்கும் வாக்காளர்களின் மனதில் வாக்கு செலுத்துவது குறித்து சிந்தனை செய்ய தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

“ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்படும் போலிகள் தேர்தல் நடைமுறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் சிதைக்கும். அதனால் இந்த தொழில்நுட்பத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம். அதனை சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், டெக் வல்லுநர்கள் மற்றும் சமூக அமைப்புகளை கொண்டு அரசு நிறுவ வேண்டும். இதன் மூலம் ஏஐ கன்டென்ட்களின் உண்மை தன்மை நியாயமான முறையில் அடையாளம் காணலாம்.

தேர்தலின் போது ஏஐ ஏற்படுத்தும் அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை மத்திய அரசு பணியமர்த்தியுள்ளது. சர்ச்சை அல்லது போலியான கன்டென்ட்கள் இதன் மூலம் நீக்கப்படும். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவல் துறையின் இந்த வகை போலி கன்டென்ட் குறித்து அவர்களுக்கு தகவல் கொடுத்தால் போதும், உடனடியாக அது நீக்கப்படும். அதோடு மாநில அளவில் இயங்கும் சைபர் க்ரைம் பிரிவு காவல் துறை அதிகாரிகள் இந்த வகை கன்டென்ட்களை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

இதற்கென நிபுணத்துவம் வாய்ந்த நபர்களை பணியில் கூட அமர்த்த செய்யலாம். குறைந்தபட்சம் தேர்தல் நேரத்திலாவது இதனை உறுதி செய்ய வேண்டும். அதோடு வாக்களர்களுக்கு டீப்ஃபேக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்” என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், சைபர் பாதுகாப்பு வல்லுநருமான திரிவேணி சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் ஜெனரேட்டிவ் ஏஐ கன்டென்ட்களை பயனர்கள் உருவாக்க உதவும் நிறுவனங்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்திய பயனர்களின் பயன்பாட்டுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடுகளை வழங்குவதற்கு முன்பு மத்திய அரசின் அனுமதி அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சட்ட விதிகளுக்கு புறம்பாகவோ அல்லது தேர்தல் செயல்முறையை அச்சுறுத்தும் வகையிலான கன்டென்ட் ஜெனரேட் செய்யப்படவில்லை என்பதற்கு உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டார்ட்-அப்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோ மற்றும் ஆடியோக்களை அகற்றும் நோக்கில் சமூக வலைதள நிறுவனங்களுக்கு சைபர் வல்லுநர்கள் செயல்பட்டு வருவதாக ஃபியூச்சர் க்ரைம் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் இணை நிறுவனர் ஷஷாங்க் சேகர் தெரிவித்துள்ளார். ஆனாலும் அதனை அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வகை ஏஐ போலி கன்டென்ட்கள் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் தேர்தலை வெளிநாடுகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. அங்கிருந்தும் இந்த வகை வீடியோ வெளிவர வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இம்மாதிரியான போலி கன்டென்ட்களை யார் உருவாக்குவது என்பதை அடையாளம் காண்பதும் சவால் நிறைந்த பணி என அவர் சொல்லியுள்ளார்.

போலி தகவல்களை தங்களது ஆதரவாளர்கள் அல்லது தொண்டர்கள் தரப்பில் இருந்து பகிராமல் இருப்பதை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த வகை போலி வீடியோ மற்றும் ஆடியோ கன்டென்ட்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் கண்காணிப்பு கமிட்டி ஒன்றையும் அமைத்துள்ளது தேர்தல் ஆணையம். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் தேர்தல் களத்தில் ஏஐ அதிர்வலைகளை எழுப்பும் என சொல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x