Published : 18 Jan 2024 06:30 PM
Last Updated : 18 Jan 2024 06:30 PM

AI சூழ் உலகு 16 | பணிகளைப் பறித்தாலும் புதிய வாய்ப்புகள் பெருகும்!  - ‘Zoom’ வேல்சாமி சங்கரலிங்கம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தனது சித்து வேலையை மெல்ல மெல்ல வெளிக்காட்டி வருகிறது. மனிதர்களின் கட்டளைக்கு இணங்க சில டாஸ்குகளை கச்சிதமாக இப்போது செய்து வந்தாலும் அது சுயமாக / தன்னிச்சையாக சிந்திக்க தொடங்கினால் என்ன ஆகும் என்ற அச்சம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய சூழலில் Zoom வீடியோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ப்ராடெக்ட் மற்றும் இன்ஜினியரிங் பிரிவின் தலைவரும், தமிழருமான வேல்சாமி சங்கரலிங்கம் அது குறித்து நம்மிடம் விவரித்துள்ளார்.

Zoom நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் டெக் நிறுவனங்களில் ஒன்று. குறிப்பாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என வீடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதியை தனது பயனர்களுக்கு இந்நிறுவனம் வழங்கி வருகிறது. கட்டண சந்தா மற்றும் கட்டனமில்லாமலும் பயனர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. ஏஐ அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இதன் செயல்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏஐ குறித்து வேல்சாமி சங்கரலிங்கம் தொடர்கிறார்.

“எனது கல்லூரி நாட்களிலிருந்தே ஏஐ பயன்பாடு இருந்து வருகிறது. அண்மைய மாற்றங்கள் என்னவென்றால் ஜெனரேட்டிவ் ஏஐ-க்கு கிடைத்துள்ள அதிகளவிலான தரவுகள் தான். அந்த வகையில் பார்த்தால் இன்டர்நெட், சமூக வலைதளம் என அதிகப்படியான தரவுகள் திரட்டப்பட்டுள்ளது. மறுபக்கம் பார்த்தால் ஜிபியு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த இரண்டு ட்ரெண்டும் அவசர காலங்களில் சவால்களை எதிர்கொள்ள உதவும். ஆரம்ப காலங்களில் இன்டர்நெட் பயன்பாட்டில் இருந்தது. பிரவுசர் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தான் இன்டர்நெட் குறித்த புரிதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்தது. இப்போது ஏஐ பயன்பாட்டில் நாம் அந்த தருணத்தில் இருக்கிறோம்.

ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் Zoom நிறுவனம் அதனை உரிய முறையில் பயன்படுத்தி வருகிறது. விர்ச்சுவல் ஸ்க்ரீன், ஆடியோ சார்ந்து எழும் நாய்ஸ்களை நீக்குவது, மீட்டிங் சார்ந்து சுருக்க உரையை பெறுவது, மீட்டிங்கில் தாமதமாக இணைந்தவர் தவறவிட்ட விஷயங்களை பட்டியலிடுவது என பல்வேறு வகையில் ஏஐ அம்சத்தை பயன்படுத்தி வருகிறோம். வரும் நாட்களில் இந்த வகை பயன்பாடு அனைத்து தளங்களிலும் பரவலாகும்.

மனிதர்களின் வேலையை ஏஐ பறிக்குமா? கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த போது மனிதர்கள் மேற்கொண்டு வரும் வேலையை பறித்து விடும் அல்லது மாற்றாக இருக்கும் என சொல்லப்பட்டது. எனது பார்வையில் இது தொழில்நுட்ப பரிணாமத்தின் ஒரு பகுதி தான். அதற்கு தகுந்த வகையில் நாம் நமது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கால்குலேட்டர் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு கணக்குகளை நாம் தான் மேற்கொண்டோம். அதன் வரவுக்கு பின்னர் பெரிய கணக்குகளை மேற்கொள்ளும் முறை மாற்றம் கண்டது.

எப்போதுமே இது மாதிரியான மாற்றங்கள் நிகழும் போது அது சார்ந்த வாய்ப்புகளும் உருவாகும். அதை மறுப்பதற்கு இல்லை. அதே நேரத்தில் ஏஐ பயன்பாடு அனைத்து துறைகளிலும் இருக்கும். அந்த மாற்றம் வேகமாகவும் நடக்கும். ஏஐ நுட்பம் எந்த அளவுக்கு பணி வாய்ப்புகளை பறிக்கிறதோ, அதற்கு மேலாக பணி வாய்ப்புகளை உருவாகும். அதற்கு தகுந்த வகையில் நாம் நமது திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

ஏஐ சார்ந்த சட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் டெக் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியம். அப்போதுதான் அதன் பயன்பாடு சரியான பாதையில் இருக்கும். இதில் அரசாங்கத்தின் பங்கு இரண்டாம் இடம் தான். ஏனெனில் அரசின் பணி அரசாட்சி தான். அதனால் அதற்கான பொறுப்புகளை அறிந்து நிறுவனங்கள் இயங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

வேல்சாமி சங்கரலிங்கம் பின்னணி: தமிழகத்தின் விருதுநகரை சேர்ந்தவர். பள்ளி மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை தமிழகத்தில் பயின்றவர். அமெரிக்காவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். அமெரிக்காவில் Zoom நிறுவனத் தலைவர் எரிக் யுவானும், இவரும் இணைந்து ஒன்றாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி உள்ளனர். Zoom நிறுவனம் தொடங்கிய சில ஆண்டுகளுக்கு பிறகு அதில் அவரும் இணைந்து பணியாற்றி வருகிறார். நேர்காணல் வீடியோ லிங்க்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x