23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன திருச்சுழி இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு!

பிரகாஷ்

பிரகாஷ்

Updated on
2 min read

விருதுநகர்: பெற்றோரைவிட்டு பிரிந்து காணாமல்போன திருச்சுழி இளைஞர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பூமாலை பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சுந்தரி (63). இவர்களது மகன்கள் பிரகாஷ், பிரபு. கூலி வேலை பார்த்து வந்த ராமமூர்த்தி கடந்த 2000-ம் ஆண்டில் குடும்பத்துடன் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூருக்கு குடிபெயர்ந்தார்.

2003-ம் ஆண்டு அவரது 16 வயதான மகன் பிரகாஷ் காணாமல்போனார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை தேடி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராம மூர்த்தி உயிரிழந்தார். இதையடுத்து சுந்தரி யும், அவரது மகன் பிரபுவும் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தும், மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இத்தனை சிரமங்களுக்கு இடையேயும் காணாமல்போன தனது மூத்த மகன் பிரகாஷை கடந்த 23 ஆண்டுகளாக சுந்தரி தொடர்ந்து தேடி வந்தார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடமும் தொடர்ந்து மனு அளித்து வந்தார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பகுதியில் கொத்தடிமையாக நடத்தப்பட்டு பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த பிரகாஷை கடந்த 2022-ம் ஆண்டு அப்னா பர்ஸ் சேவா சொசைட்டி என்ற தொண்டு நிறுவனத்தினர் மீட்டனர்.

பின்னர், அவரை பாட்டியாலா மாவட்டம் லக்கானியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்து பராமரித்து வந்தனர். பிரகாஷின் பின்னணி குறித்து விசாரித்தபோது, அவருக்கு தாயாரின் பெயர், ஊரின் பெயரை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. இதனால், அவரை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், அந்த தொண்டு நிறுவனத்தை பார்வையிட சண்டிகரில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சுபாஷ் தற்செயலாக சென்றார். அவருக்கு பிரகாஷ் குறித்து தெரிய வந்தது. இதையடுத்து, தனது நண்பர் திருப்பூரைச் சேர்ந்த முத்தையாவுக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பிரகாஷின் குடும்பத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து சுந்தரி தனது மகனை தேடி வருவது குறித்து தெரிய வந்ததும், அவரை இருவரும் செல்போனில் தொடர்புகொண்டு விவரம் தெரிவித்தனர்.

இதையடுத்து, சுந்தரியின் இளைய மகன் பிரபு, உறவினர் சுந்தரலிங்கம் ஆகியோர் கடந்த 2-ம் தேதி பாட்டியாலாவுக்குச் சென்று பிரகாஷை நேரில் பார்த்து உறுதிப்படுத்தினர். பின்னர் சுந்தரியின் மகன் தான் என்பதை நிரூபிக்க உரிய ஆவணங்களை தயார் செய்தபின் நேற்று பிரகாஷை மீட்டனர்.

இதுகுறித்து ஆட்சியர் சுகபுத்ரா கூறுகையில், 23 ஆண்டுகளாக மகனை தேடி வந்த தாயின் பாசப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அவர்களது பூர்வீகம் தொடர்பான ஆவணங்களை துரிதமாக சேகரித்து அனுப்பி னோம். இதன் மூலம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிரகாஷ் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தது மகிழ்ச்சிய ளிக்கிறது என்று கூறினார்.

<div class="paragraphs"><p>பிரகாஷ்</p></div>
நடப்பு 2026-27 முதல் காலாண்டில் ரூ.82,000 கோடிக்கு இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in