

புதுடெல்லி: நடப்பு 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4% அதிகரித்து, சுமார் ரூ.82,000 கோடியைத் தாண்டி உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.76 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தயாரிப்புகளுக்கு அமெரிக்கச் சந்தையில் நிலவும் வலுவான தேவையின் காரணமாக, இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த அபார வளர்ச்சியால் நாட்டின் ஒட்டுமொத்த மின்னணு சாதனங்களின் ஏற்றுமதியும் ஏற்றம் கண்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ரூ.1.45 லட்சம் கோடி மின்னணு சாதன ஏற்றுமதியில், ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு மட்டும் 64.8 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்களில் 3-ல் ஒரு பங்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டம் (பிஎல்ஐ), சிறப்பு பொருளாதார மண்டலச் சீர்திருத்தங்கள், கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு, அந்நிய நேரடி முதலீட்டுத் தளர்வுகள் ஆகியவை இந்த வேகமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.