

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில், தவெக தலைவரும், முதல்வருமான விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 27,416 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், சென்னை உயர் நீதிமன்றத் தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பு மனுவில் வருமானவரி பாக்கி இல்லை எனக் கூறியுள்ளார்.
வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதை மறைத்துள்ளார். அதிகளவில் செலவு செய்து வெளிநாட்டினர் மூலம் பிரச்சாரம் செய்துள்ளார். கட்சி அடையாளங்களை அணிந்து சென்று முட்டி போட்டு தேவாலயத்தில் பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் செலவு கணக்கு
தேர்தல் செலவு கணக்கு விவரங்களை இதுவரை தாக்கல் செய்யவில்லை. ரூட் சமூக வலைதளம் மூலம் பிரச்சாரத்துக்கு எவ்வளவு செலவு செய்தார் என்ற விவரங்களை இதுவரை தெரிவிக்கவில்லை. இதேபோல பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதால் என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
குவியும் வழக்குகள்
இதேபோல், கோபிசெட்டிப் பாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெகவைச் சேர்ந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவைச் சார்ந்த வி.பி.பிரபு, தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘‘வேட்புமனுவில், சொத்து, குற்ற வழக்கு விவரங்கள் தெரிவிக்கும் பிரமாண பத்திரத்தில் தகவல்களை சான்றளித்து கையெழுத்திட்டுள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகி விட்டது.
அதனால் அந்த வேட்பு மனுவை ஏற்றது முறையற்றது என்பதால், செங்கோட்டையன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீமா ரோஸுக்கு எதிராக...
லால்குடி தொகுதியில், தவெக வேட்பாளரைவிட 2,739 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பாரிவள்ளல் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘‘7 நிறுவனங்களில் தனக்குள்ள பங்குகள் குறித்த விவரங்களை லீமா ரோஸ் மறைத்துள்ளார். அதிமுக துண்டு அணிந்து கொண்டு, தேவாலயங்களில் பிரச்சாரம் செய்தார்’’ என கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை தொகுதியில், 1,867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ முத்துராஜாவின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் ஷெரீப், தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.