

சென்னை: தமிழகத்தில் நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் (ஆக.13), நாளை மறுதினமும் நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழகத்தில் நாளை மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 14-ம் தேதி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இயங்களிலும் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
15-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களிலும், 16, 17 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், 18-ம் தேதி மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 16-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் ஏ.மரூரில் 9 செமீ, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 8 செமீ, அரியலூர் மாவட்டம் குருவாடியில் 7 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, சேலம் மாவட்டம் ஆத்தூர், மதுரை விமான நிலையத்தில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.