

சென்னை: தமிழகத்தில் உள் மாவட்டங்களில் நாளை முதல் 23-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஜூலை 20) முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
24-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.
25-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில லேசான மழையும் பெய்யக்கூடும்.
கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 23-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியும், உள் தமிழகம் மற்றும் இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில், வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, சிவகங்கை, நடுவட்டம், பந்தலூர், பார்வூட், வூட் பிரையர் எஸ்டேட், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, விழுப்புரம் மாவட்டம் வளத்தி ஆகிய இடங்களில தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.