Published : 28 May 2023 06:58 AM
Last Updated : 28 May 2023 06:58 AM

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

திருப்பூர்: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அடுத்த மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் குன்னத்தூர் குளம், ஆதியூர் குளம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் மேற்குபதி குளம் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் கிரேநகர் நீரேற்று நிலையம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் இமாம்பூண்டி நீரேற்று நிலையம் ஆகிய இடங்களில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் மூலம் நீரேற்றம் செய்வது ஆய்வு செய்யப்பட்டது.

செய்தித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது, பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ் புறத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 1.50 டி.எம்.சி. உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம். மொத்தம் 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் மூலம் ரூ.1756 கோடி மதிப்பில் பூர்வாங்க மற்றும் மேம்பாட்டு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் 6 நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லகவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த திட்டத்தில் எம்.எஸ். குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீட்டர் நீளத்துக்கு முடிவடைந்துள்ளது.

எச்.டி.பி.இ. குழாய்கள் பதிக்கும் பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது. தற்போது சுமார் 797.50 கி.மீ. அளவு குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை ஆறு நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதான குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், நீரேற்று நிலையங்களின் இடையில் உள்ள கிளைக்குழாய்கள் மற்றும் 1045 குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து சோதனை ஓட்ட பணிகள் முடிக்கப்பட்டு, இந்த திட்டத்தை அடுத்த மாதம் (ஜுன்) பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x