Published : 27 May 2023 06:17 AM
Last Updated : 27 May 2023 06:17 AM
சென்னை: சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் உள்ள 790 பள்ளிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்துக்குள் ஒரு பள்ளி உட்பட 139பள்ளிகள் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் பள்ளிக் கல்வித்துறை ஒப்படைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா 181-வது வார்டுக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், குப்பம்சாலையில் உள்ள செயின்ட் தாமஸ்மவுண்ட் பஞ்சாயத்து வாரிய பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக நேற்றுஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, 186-வது வார்டுக்கு உட்பட்ட பெருங்குடி, பள்ளிசாலையில் உள்ள பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டுவது தொடர்பாகவும், 189-வது வார்டுக்கு உட்பட்ட நாராயணபுரத்தில், தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலையில் உள்ளபஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில்கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் புனரமைப்பு பணிகள்மேற்கொள்வது தொடர்பாகவும்,191-வது வார்டுக்கு உட்பட்ட ஜல்லடியான்பேட்டை, வீராத்தம்மன் கோயில் தெருவில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டுதல் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாகவும், 188-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர் பஞ்சாயத்து ஒன்றியநடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்தல், சமையலறை கட்டுதல்,கழிப்பிடம் மற்றும் இதர புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த.விசுவநாதன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, தெற்கு வட்டார துணை ஆணையர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர் எஸ்.வி. ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT