Published : 24 May 2023 06:18 AM
Last Updated : 24 May 2023 06:18 AM

வெளிமாநில மது, கள்ளச்சாராய விற்பனையை தமிழகத்தில் முற்றிலுமாக தடுக்க வேண்டும்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வெளிமாநில மதுபானம், கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கலால் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் தஞ்சையில் காலை நேரத்தில் மதுபான பார்கள் இயங்கியது உள்ளிட்டவை தொடர்பான சர்ச்சைகள் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட அளவிலான அனைத்து கலால் பிரிவு துணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் உள்துறை செயலர் பெ.அமுதா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் எம்.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சோதனை சாவடி: கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: தொழிற்சாலைகளால் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால், இயல்பு மாற்றப்பட்ட சாராவி (ஸ்பிரிட்) மற்றும் தெளிந்த சாராவி ஆகியன உரிய வழிமுறையில் பெறப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். உரிய உரிமதாரர்களுக்கு மட்டுமே இவை விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும், பெறப்படுகின்ற மூலப்பொருள் எதை உற்பத்தி செய்ய வழங்கப்படுகிறதோ, அதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

மேலும், டாஸ்மாக் கடைகள், எஃப்.எல்.2 உரிமம் பெற்ற கிளப், எஃப்.எல்.3 உரிமம் பெற்ற ஓட்டல், என்டிஆர்சி உரிமம் பெற்ற இடங்கள் ஆகியவற்றை கண்காணித்து விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டிருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லை மாவட்டங்களில் தொடர்புடைய மாவட்ட கலால் அலுவலர்கள், கலால் காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து, சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வெளிமாநில மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றின் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தலை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ்ஆகியவற்றுக்காக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட வேண்டும்.

மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, போதை மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாவட்டந்தோறும் விழிப்புணர்வுப் பேரணி, முகாம்கள், கருத்தரங்குகள், தெரு நாடகங்கள், சிறு நாடகங்கள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பொது இடங்களில் விளம்பரம் மற்றும் துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், மனித சங்கிலி போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x