Published : 24 May 2023 04:57 AM
Last Updated : 24 May 2023 04:57 AM

ரத்த சோகை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வளரிளம் பருவத்தினருக்கு 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: ரத்த சோகை இல்லா தமிழகமாக மாற்ற மாநிலம் முழுவதும் வளரிளம் பருவத்தினருக்கு 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழக சுகாதாரத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் வளரிளம் பருவத்தினருக்கான 25,000 விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும் வகையில் சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பத்மஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: வளரிளம் பருவத்தினர் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் 25,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மாதத்துக்கு ஒரு முகாம் என்கிற வகையில் நடத்தப்படுமென நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சைதாப்பேட்டை, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500 பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு இச்சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த முகாம்களில் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவ மாணவ, மாணவிகளுக்குச் சுகாதார ஆலோசனைகள், விழிப்புணர்வு மற்றும் ரத்த சோகைக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிறப்புப் பரிசோதனைகளும் மேற்கொள் ளப்படும். இதன் மூலம் தமிழகம்முழுவதும் உள்ள 1.2 கோடி வளரிளம் பருவத்தினர் பயனடை வார்கள்.

தமிழகத்தில் ரத்த சோகை பாதிப்பைப் பொறுத்தவரை வளரிளம் பெண்களுக்கு 52.9 சதவீதம், வளரிளம் ஆண்களுக்கு 24.6 சதவீதம் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளரிளம் பருவத்தினர்களை கண்டறிந்து 20 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன் ரத்த சோகை இல்லா தமிழகமாக மாற்றுவதே இச்சிறப்பு முகாமின் நோக்கமாகும்.

மருத்துவர்களின் வழிகாட்டுதல்...: இந்த திட்டத்தை மாணவ, மாணவிகள் பின்பற்றும் போதுஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஊட்டியில் இரும்புச் சத்து மாத்திரைகளை அதிக அளவில் ஒரு மாணவி எடுத்துக்கொண்டதால், உடல் நலம் பாதிக்கப்பட்டார். எனவே, ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்கள் மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி மாத்திரைகளை மிகக் கவனமாக உட் கொள்ள வேண்டும்.

வருமுன் காப்போம் என்ற திட்டத்தில் முதலாம் ஆண்டு 1,260 முகாம்களும், இரண்டாம் ஆண்டு 1,532 முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான பொது மக்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x