Published : 23 May 2023 06:28 AM
Last Updated : 23 May 2023 06:28 AM

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பகுதிநேர ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்யக் கோரி, டிபிஐ வளாகத்தில், தமிழ்நாடு பகுதிநேரஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. படம்: ம.பிரபு

சென்னை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் காலம்தாழ்த்தி வருகிறது. மே மாதம் சம்பளம், ஊதிய உயர்வு எதுவுமே இதுவரை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை.

கள்ளச்சாராயம் குடித்து இறந்துபோனவர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கி முதல்வர் ஆறுதல் கூறி உள்ளார். ஆனால் பணி காலத்தில் இறந்த பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் எதுவுமே செய்யவில்லை.

2012-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி,இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களில் 5 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட்டனர். வாரம் 3 அரை நாட்கள் என்ற ரீதியில் மாதம் 12 அரை நாட்கள் பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் கூடுதலாகவே பணிபுரிகிறோம். சம்பள உயர்வுமுதன் முதலில் 2014-ம் ஆண்டுரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

பின்னர் 2017-ம் ஆண்டு ரூ.700 உயர்த்தப்பட்டது. கடைசியாக 2021-ம் ஆண்டு ரூ.2,300 சம்பளம் உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.10,000 ஊதியம் பெறுகிறோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொகுப்பூதியம் ஒழித்து காலமுறை சம்பளம் வழங்கி தமிழக முதல்வர் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x