Last Updated : 18 May, 2023 04:28 PM

 

Published : 18 May 2023 04:28 PM
Last Updated : 18 May 2023 04:28 PM

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி எதுவும் அமைக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்

மதுரை: கொள்ளிடம் ஆற்றில் 25 இடத்தில் மணல் குவாரிகள் அமைக்க, அரசு எடுக்கும் முயற்சியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவாகுமார். இவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: ''தஞ்சாவூர் மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் அமைந்துள்ள கல்லணை 2,000 ஆண்டுக்கு முன்பு கரிகால சோழனால் கட்டப்பட்டது. பல நூறு ஆண்டாக பராமரிக்கப்பட்டு தற்போது, வரை அனைவரும் வியந்து பார்க்கும் அணையாக கல்லணை உள்ளது. இந்நிலையில், கல்லணை அருகே 25 இடங்களில் மணல் குவாரி அமைக்க, தமிழ்நாடு அரசு சில நடவடிக்கையை முன்னெடுக்கிறது. இதனால் மிக பழமையான கல்லணை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. மேலும், டெல்டா பகுதியிலுள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

ஏற்கெனவே, கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்ததால் கல்லணை பாலம் சேதமடைந்தது. கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தஞ்சாவூர் கொள்ளிடம் பகுதியில் 25 இடங்களில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும், பாரம்பரியமான கல்லணை அணையை காப்பாற்ற கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் பாரம்பரியமான கல்லணை சேதம் அடைய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர். அரசு தரப்பில், “கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி எதுவும் அமைக்கப்படவில்லை; கொள்ளிடம் ஆற்றினை சுத்தம் செய்து 25 இடங்களில் குடிநீர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கை ஆரம்ப நிலையிலேயே உள்ளது'' என்றனர்.

நீதிபதிகள் தரப்பில், கொள்ளிடம் ஆற்றில் எந்த மணல் குவாரியும் அமைக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவித்த பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். இதனிடையே, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் பாரம்பரியமான கல்லணை சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x