Published : 18 May 2023 06:17 AM
Last Updated : 18 May 2023 06:17 AM
சென்னை: சென்னை ஐசிஎஃப் உள்ளிட்ட 3 ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலைகளில் 2024-25-ம் நிதியாண்டில் 6,991 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, ரயில்களில் பழைய பெட்டிகளுக்கு மாற்றாக நவீன ரயில் பெட்டிகள் (எல்எச்பி பெட்டி) சேர்ப்பது, தண்டவாளத்தை மின் மயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ரயில்வேநிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், `வந்தே பாரத்' ரயில் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன ரக ரயில் பெட்டிகள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை ஐசிஎஃப்,கபுர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலை உள்ளிட்ட 3 தொழிற்சாலைகளில் 2024-25-ம் நிதியாண்டில் 6,991 ரயில் பெட்டிகளைத் தயாரிக்கரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 3,619 பெட்டிகள், கபுர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஆர்சிஎஃப்) 1,850 பெட்டிகள், ரேபரேலி நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (எம்சிஎஃப்) 1,522 பெட்டிகள் என மொத்தம் 6,991 பெட்டிகள் தயாரிக்க வேண்டும்.எல்எச்பி வகையான பிரிவுகளில் 3,902 பெட்டிகளும், வந்தே பாரத்ரயில்களுக்காக 1,008 பெட்டிகளும்தயாரிக்க வேண்டும் என்று ரயில்வேவாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 2024-25-ல் 688 வந்தே பாரத் பெட்டிகளும், கபுர்தலா ரயில்பெட்டித் தொழிற்சாலை, ரேபரேலி நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தலா 160 வந்தே பாரத் ரயில் பெட்டிகளும் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 84 மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, ரயில் பாதை மேம்பாடு ஆகியவற்றுக்கு நவீன வகையிலான ரயில் பெட்டிகள் அவசியமாகின்றன. அந்த வகையில், சென்னை ஐசிஎஃப்-ல் நவீனபெட்டிகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024-25-ம்நிதியாண்டுக்கான ரயில் பெட்டிகள் தயாரிப்பு அட்டவணையை, ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலைகளின் பொதுமேலாளர்களுக்கு கடந்த 15-ம் தேதி ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது.
ரயில்வே வாரியத்தின் உத்தரவுபடி, நவீன ரக ரயில் பெட்டிகளைத் தயாரித்து, முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் படிப்படியாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT