Published : 16 May 2023 06:33 AM
Last Updated : 16 May 2023 06:33 AM

மாநகராட்சியில் வெளிப்படையான நிர்வாகம்: சென்னை புதிய ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உறுதி

பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய ஆணைய ராக பொறுப்பேற்ற ஜெ.ராதாகிருஷ்ணன். படம்: பு.க.பிரவீன்.

சென்னை: தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் கடந்த மே 13-ம் தேதிபணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங்பேடி, சுகாதாரத் துறை செயலராகநியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, கவுன்சிலர் சி.ராஜசேகரன் மற்றும் மாநகராட்சியின் பல்வேறு துறைஅலுவலர்கள் வரவேற்று வாழ்த்துதெரிவித்தனர்.

பின்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 2000-01 காலகட்டத்தில், இன்றைய முதல்வர் ஸ்டாலின், மேயராக இருந்தபோது நான் மாநகராட்சி ஆணையராக பணியாற்றினேன். அதற்கு முன்பு, 1999-ம் ஆண்டுதுணை ஆணையராக (சுகாதாரம்)பணியாற்றி இருந்தேன். அப்போதுமாநகராட்சியின் பரப்பு 176 சதுர கிமீ ஆக இருந்தது. இப்போது 426 சதுரகிமீ ஆக இதன் பரப்பு விரிவடைந்துள்ளது. சமீபத்தில் கரோனா பரவலின்போது சென்னை மாநகரப்பகுதியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் உள்ளிட்ட பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து, முதல்வரின் எண்ணங்களை விரைவாகச் செயல்படுத்துவேன். முதல்வரின் வழிகாட்டுதல்கள் முறையாகச் செயல்படுத்தப்படும். மக்களின் அன்றாட குறைகளையும் தீர்க்க பாடுபடுவேன். பணியாளர் நலனிலும் கவனம் செலுத்தப்படும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கும் புளியந்தோப்பு போன்ற இடங்களில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்பணிகள் வேகப்படுத்தப்படும். மாநகராட்சியில் வெளிப்படையான, எளிமையான நிர்வாகம் கொண்டுவரப்படும். கள நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x