Published : 16 May 2023 06:48 AM
Last Updated : 16 May 2023 06:48 AM

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பகுதியில் நெரிசலை தவிர்ப்பது குறித்து ஆலோசனை: இறுதிகட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து நிலையம் வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. படம்: எம்.முத்துகணேஷ்

வண்டலூர்: கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் ஜிஎஸ்டி சாலை வழியாக நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும் தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்களை அமைப்பது தொடர்பாகவும் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இதையடுத்து காவல்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

இறுதிகட்ட பணிகள் தொடர்பாக நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இம்முனையத்திலிருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளித்தார்.

இக்கூட்டத்தில் கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும் கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை- 7 கிமீ தூரத்துக்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை - 18 கிமீ தூரத்துக்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை 10 கிமீ தூரத்துக்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதனை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சென்னை வெளிவட்ட சாலை, வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தையும் பார்வையிட்டு கள ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ், சென்னை பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ், செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், தாம்பரம் மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) ந.காமினி, காவல் இணை ஆணையாளர் பா.மூர்த்தி மற்றும் பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x