Last Updated : 15 May, 2023 04:02 AM

 

Published : 15 May 2023 04:02 AM
Last Updated : 15 May 2023 04:02 AM

அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின்கீழ் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்

சென்னை: அம்ரீத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரூ.716.84 கோடி மதிப்பில், 104 கருத்துருக்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

நாட்டின் பெரிய, சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அம்ரீத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், நாட்டில் 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.881.42 கோடி மதிப்பில், 125 கருத்துருக்கள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில், ரயில் நிலையங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ 716.84 கோடி மதிப்பில், 104 கருத்துருக்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல, தெற்கு ரயில்வேயில் 90 நிலையங்களை ஆய்வு செய்யும் பணிகளுக்காக ரூ.11.22 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை கிண்டி, அரக்கோணம், ஈரோடு, கரூர், கோவை வடக்கு, தஞ்சாவூர், தென்காசி, நாகர்கோவில் சந்திப்பு உள்ளிட்ட 60 நிலையங்கள், கேரளாவில் சொரனூர், தலைசேரி, குட்டிப்புரம் உள்பட 26 நிலையங்கள், புதுச்சேரியில் மாஹி, காரைக்கால் ஆகிய 2 நிலையங்கள், கர்நாடகாவில் மங்களூர், ஆந்திராவில் சூலூர்பேட்டை நிலையம் என மொத்தம் 90 நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடும் ஆலோனைக் குழுவுக்கு ரூ.11.22 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இக்குழு ரயில் நிலையங்களில் ஆய்வு செய்து, பயணிகளின் தேவை, எண்ணிக்கை, இணைப்பு வாகன வசதி உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

மொத்தம் 90 நிலையங்கள் மேம்படுத்துவதற்காக, 150 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ரூ.881.42 கோடி மதிப்பில், 126 கருத்துருக்கள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் ரூ 716.84 கோடி மதிப்பில், 104 கருத்துருக்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறப்பு அம்சங்கள்: இந்த திட்டத்தில், பயணிகள் காத்திருப்போர் அறைகள் மேம்படுத்தப்படும். ரயில் நிலையத்தில் சிற்றுண்டிக்கடைகள் அல்லது சிறிய கடைகள் அமைக்கப்படும். ஒரு ரயில் நிலையத்தில், "ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு" திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 கடைகள் திறக்கப்படும். ரயில் நிலையத்தின்முக்கிய இடங்களில் ரயில் வருகை,புறப்பாடு உள்ளிட்ட விவரங்களைக் காட்சிப்படுத்தும் பலகைகள் பொருத்தப்படும். மேலும், பயணிகளைக் கவரும் வகையில் இயற்கை காட்சிகள், செடிகள், மரக் கன்றுகள் உருவாக்கப்படும். அனைத்துப் பகுதிகளிலும் 600 மீட்டர் நீளம் கொண்ட, உயர்நிலை நடைமேடை அமைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x