Published : 15 May 2023 03:42 AM
Last Updated : 15 May 2023 03:42 AM

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் தவறிவிட்டதாக கூறி, மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்ட எக்கியார் குப்பம் கிராம மக்கள்.

கள்ளக்குறிச்சி/ மதுராந்தகம்: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 3 பெண்கள் உட்பட 10 உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் நேற்றுமுன்தினம் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராஜமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் அதை வாங்கி குடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால், புதுச்சேரி காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி, மலர்விழி, மண்ணாங்கட்டி ஆகிய 6 பேரும் நேற்று உயிரிழந்தனர். மற்ற 20 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், விழுப்புரம் எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளச் சாராய வியாபாரி அமரன் உள்ளிட்ட 5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்த வியாபாரி முத்து என்பவரை தேடி வருகின்றனர்.

மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், விழுப்புரம் மதுவிலக்கு ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர்கள் தீபன், சிவகுருநாதன் ஆகிய 4 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங்கரணை இருளர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (30), இவரது மனைவி அஞ்சலி (22),அஞ்சலியின் தாய் வசந்தா ஆகிய 3 பேரும் கடந்த 12-ம் தேதி இரவு கள்ளச்சந்தையில் மது வாங்கி அருந்தியுள்ளனர். பின்னர், வீட்டிலேயே மயங்கி விழுந்த3 பேரும், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, சின்னதம்பி, வசந்தா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அஞ்சலி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இவர்களது உறவினரான சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியப்பன் (65),அவரது மனைவி சந்திரா (55) ஆகிய இருவரும் கள்ளச் சந்தையில் நேற்று முன்தினம் இரவு மது வாங்கி அருந்தியுள்ளனர். இருவரும் வீட்டின் அருகே நேற்றுகாலை இறந்து கிடந்துள்ளனர்.

மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் ஆகியோர் விசாரணை நடத்தினர். காஞ்சிபுரம் சரக டிஐஜிபகலவனும் விசாரணை மேற்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவிஆய்வாளர் ரமேஷ் ஆகிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நேற்று கூறியபோது, ‘‘தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தலைமறைவான 4 பேரைபிடிக்க 10 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x