Last Updated : 11 Sep, 2017 11:32 AM

 

Published : 11 Sep 2017 11:32 AM
Last Updated : 11 Sep 2017 11:32 AM

கோவை கலங்கல் அருகே மதகுகளை அடைத்ததால் நீர் நிறைந்து அச்சுறுத்தும் தடுப்பணை: மணல் மூட்டைகளை அடுக்கி நீர் வரத்தைக் கட்டுப்படுத்தும் மக்கள்

கோவை கலங்கலில் மதகுகள் அகற்றப்பட்ட தடுப்பணையில் நீர் நிறைந்து சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நீர்வழிப்பாதையில் மணல் மூட்டைகளை அடுக்கி நீர்வரத்தை தடுக்கும் முயற்சியில் மக்கள் இறங்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சூலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தணிந்தாலும் ஒரு சில இடங்களில் நீர்வரத்து தொடர்ந்து காணப்படுவதால் நீர்நிலைகளில் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கெனவே கோவையில் அதிக நீர்வரத்தால் அடுத்தடுத்து தடுப்பணைகள் உடைந்து வரும் நிலையில் சூலூர் பகுதி மக்களிடையேயும் இந்த அச்சம் மேலோங்கியுள்ளது.

பாப்பம்பட்டி பகுதியிலிருந்து வாய்க்கால்கள் வழியாக நீர்வரத்தைப் பெறுகிறது கலங்கல் செங்குட்டை. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள தடுப்பணையில் நிறைந்து பின்னர், வடக்கே நாரநத்தம்குட்டை அடைந்து அங்கிருந்து, காங்கேயம்பாளையத்தில் நொய்யலை அடைகிறது.

இந்த மழையின்போது இந்த நீர்வழிப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக கலங்கல் செங்குட்டைக்கும், அதிலிருந்து தடுப்பணைக்கும் நீர் வரத்து இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் ஒருநாள் மழை நீடித்தால் இவ்விரண்டு நீர் நிலைகளும் நிரம்பவும், தடுப்பணை சேதமடையவும் வாய்ப்புள்ளது. எனவே, வேறு வழியில்லாததால் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி செங்குட்டைக்கு வரும் நீரை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொதுமக்களே இறங்கியுள்ளனர்.

மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வருவதை தடுப்பது நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தாது. எனவே தடுப்பணையில் இருந்து அகற்றப்பட்ட மதகை உடனடியாக பொருத்தினால் மட்டுமே வெள்ள சேதத்தை தடுத்து, நீரை சேமிக்க முடியும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கலங்கல் கிராம மக்கள் கூறும்போது, ‘சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு இந்த அளவுக்கு மழை பெய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மழையே வராமல் இருந்ததால், 15 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணையில் இருந்த மதகை அகற்றிவிட்டு, நீர் வெளியேறும் இடத்தை சுவர் வைத்து அடைத்துவிட்டார்கள். இனி மழையே வராது, தடுப்பணை நிரம்பாது என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்தார்களா எனத் தெரியவில்லை.

ஆனால் அதுவே இப்போது ஆபத்தாகியுள்ளது. கடந்த வாரம் அதிக மழை பெய்ததில் செங்குட்டை கரை சேதமாகி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. அதை மக்களே சீரமைத்து விட்டோம். அடுத்ததாக குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் தடுப்பணையை நிறைத்துவிட்டது. தண்ணீரை மெல்ல மெல்ல பாசன வாய்க்காலில் திறந்து விடாவிட்டால் தடுப்பணை சேதமடைய வாய்ப்புள்ளது. வேறு வழியில்லாததால், குளத்துக்கு வரும் நீரை எங்களால் முடிந்த அளவுக்கு தடுக்க முயற்சிக்கிறோம்’ என்றனர்.

இந்த பிரச்சினை குறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வோடு நின்றுவிடாமல் மழை தீவிரமடையும் முன்பாக துரித நடவடிக்கை வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x