Published : 04 May 2023 06:02 AM
Last Updated : 04 May 2023 06:02 AM

730-வது யோகா ஹார் தின விழா கொண்டாட்டம்

சென்னை: 730-வது ‘யோகாஹார் தினம்’ விழா பெரும் உற்சாகம், மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. ‘தானாக முன்வந்து யோகா உணவு முறையை கடைப்பிடித்தல்’, ‘தண்ணீர் மூலம் வாழ்க்கை’ ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இவ்விழா நடைபெற்றது.

2 ஆண்டுகள் நடைபெற்ற யோகாஹார் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் உத்தரப் பிரதேசம் பண்டாவைச் சேர்ந்த உமாசங்கர் பாண்டே, உத்தராகண்டை சேர்ந்த கல்யாண் சிங் ராவத், ராஜஸ்தானைச் சேர்ந்த ஷியாம்சுந்தர் பாலிவால், லட்சுமண் சிங் லபோடியா, உ.பி. சஹாரன்பூரைச் சேர்ந்த சேத்பால் சிங், லக்னோ தேசிய சுகாதார இயக்க கூடுதல் நிர்வாக இயக்குநர் ஹிராலால், பதஞ்சலி ஆர்கானிக் ஆராய்ச்சி தலைமை பொது மேலாளர் பவன்குமார் மற்றும் 19 மாநிலங்களைச் சேர்நத 80 யோகாஹார் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். புதுடெல்லி, துவாரகாவைச் சேர்ந்த ஷிலா யாதவ், ராஜேஷ் யாதவ் ஆகியோர் யோகா செய்து காட்டினர்.

நிகழ்ச்சியில் பேசிய உமாசங்கர் பாண்டே, “தண்ணீர் கிடைப்பது இன்றைய காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். இப்பிரச்சினையை தீர்ப்பதில் விவசாயிகள் பெரும் பங்கு வகிக்க முடியும்” என்றார்.

“இமயமலை, காடுகள் மற்றும் ஆறுகளின் மாநிலமாக உத்தராகண்ட் மாநிலம் விளங்குகிறது. இங்கு நீர் ஆதாரம் மாசு மற்றும் புவி வெப்பமடைதல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறது. அதை நம் முயற்சியால் பாதுகாக்க வேண்டும்” என்று கல்யாண் சிங் ராவத் கூறினார்.

“பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்றவற்றால் உணவுப் பொருட்கள் நஞ்சாகி புற்றுநோய் போன்றவை அதிகரித்து வருகின்றன. விவசாயிகள் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றி இந்த உலகையும் மக்களையும் காக்க வேண்டும்” என்று ஷியாம்சுந்தர் பாலிவால் கூறினார்.

யோகாஹார் நிகழ்ச்சி குறித்து விவேக் பெனிபூரி கூறும்போது, “கடந்த 2021 மே மாதம் யோகாஹார் தொடங்கப்பட்டது. தினமும் 5:30 முதல் 8:30 மணி வரை 2 வகுப்புகள் நடைபெற்றன. இதுவரை இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 730 யோகா ஆசிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். உணவு, நல்வாழ்வு, இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல், தண்ணீர் சேமிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் தலைமை விருந்தினர்கள் உரையாற்றினர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x