Last Updated : 29 Apr, 2023 06:14 AM

 

Published : 29 Apr 2023 06:14 AM
Last Updated : 29 Apr 2023 06:14 AM

தூத்துக்குடி | ஆடு மேய்க்கும் விவசாயிக்கு இரண்டரை ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பு: மணல் மாஃபியாக்களின் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டப்படுமா?

போலீஸ் பாதுகாப்புடன் ஆடு மேய்க்கும் விவசாயி பாலகிருஷ்ணன்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணல் மாஃபியாக்களின் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் ஆடு மேய்த்து வருகிறார் விவசாயி பாலகிருஷ்ணன். மணல் மாஃபியாக்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி, தாமிரபரணி நதியைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்ததால் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி உயிரை விட்டவர்கள் பலர். கடந்த 3 நாட்களுக்கு முன் முறப்பநாடு கோவில்பத்து கிராமநிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளை கும்பலால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாமிரபரணி நதியை ஒட்டியபகுதிகளில் மணல் மாஃபியாக்களின் ஆதிக்கமும், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், சமூகஆர்வலர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களுக்கும் அச்சுறுத்தல்ஏற்படுவது தொடர்கிறது.

ஒரு விவசாயிக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதே, மணல் மாஃபியாக்களின் ஆதிக்கத்துக்கு சான்று. முறப்பநாடு கிராமத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், தாமிரபரணிஆற்றின் மறுகரையில் அமைந்துள்ளது அகரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன்(47), அகரம் ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினராகவும் இருகிறார்.

தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளை தொடர்பாக, 2019-ல் முறப்பநாடு காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காததால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தார்.

இதனால் இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.கடந்த இரண்டரை ஆண்டுகளாகபாலகிருஷ்ணனுடன், துப்பாக்கி ஏந்திய ஒரு போலீஸ்காரர் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக உடனிருக்கிறார்.

இதுகுறித்து விவசாயி பாலகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘தற்போது விவசாயப் பணிகள் இல்லை. சுமார் 10 ஆடுகளை வளர்த்து வருகிறேன். ஆடுகளை மேய்க்கச் செல்லும்போதும், காவலர் கூடவே இருப்பார்.

எனது வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணல் மாஃபியாக்களை ஒழிக்க வேண்டும். அதிகாரிகள் சிலர் உதவியுடன், தாமிரபரணியில் மணல் கொள்ளை தொடர்கிறது. அவர்களைக் களையெடுக்க வேண்டும். மணல் மாஃபியாக்களை ஒழித்து, தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x