Published : 29 Apr 2023 06:20 AM
Last Updated : 29 Apr 2023 06:20 AM

தமிழகத்தில் முதன்முறையாக தூர் வாரும் பணியை கண்காணிக்க செயலி - பணிகளின் வெளிப்படை தன்மைக்காக ஏற்பாடு

திருச்சி: தமிழகத்தில் நடைபெறும் நீர்நிலைகள் தூர் வாரும் பணிகளை கண்காணிக்க முதன்முறையாக தனி செயலியை நீர்வளத் துறை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் சேர்ந்துள்ள மண் குவியல்கள், புதர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி நீர் தடையின்றி பாசனத்துக்கு செல்லும்வகையிலும், மழை, வெள்ள காலங்களில் நீர் எளிதாக வெளியேறும் வகையிலும் நீர்நிலைகள் ஆண்டுதோறும் நீர்வளத் துறை சார்பில் தூர் வாரப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் நிகழாண்டு காவிரி டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர் வார ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகளை தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

தமிழக நீர்வளத் துறை வரலாற்றில் முதன்முறையாக தகவல் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு தூர் வாரும் பணியை அதிகாரிகள் அன்றாடம் கண்காணிக்கும் வகையில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (TNWRIMS) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை பொறியாளர்கள் ‘இந்து தமிழ்’நாளிதழிடம் கூறியது: தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் இந்தஆண்டு தூர் வாரும் பணிகள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகின்றன.

ஏற்கெனவே தூர் வாரப்படாத நீர்நிலைகளுக்கு இந்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று விவசாயிகள், பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலும், அத்தியாவசியமாக செய்யப்பட வேண்டியவை என்ற அடிப்படையிலும் தூர் வாரும் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை நீர்வளத் துறை பொறியாளர்கள் அன்றாடம் கண்காணிக்கும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் எந்தெந்த நீர்நிலைகளில் தூர் வாரும் பணி எத்தனை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறுகிறது என்ற விவரம் இடம்பெற்றிருக்கும். தூர் வாருவதற்கு முன்பாக அந்த இடத்தின் புகைப்படம், தூர்வாரிய பின்னர் அந்தஇடத்தின் புகைப்படம் ஆகியவற்றை நாள்தோறும் நீர்வளத் துறை அலுவலர்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்வர்.

இதன் மூலம் பணிகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள ஏதுவாகும். இந்த செயலிமுதல்கட்டமாக தற்போது நீர்வளத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் செயலியை பயன்படுத்தும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.

கடந்த ஆண்டைப் போன்று நிகழாண்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு அதிகமாகவே உள்ளதால் வழக்கமாக அணை திறக்கப்படும் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாக அதாவது ஜூன் முதல் வாரத்துக்குள் தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x