Published : 29 Apr 2023 06:00 AM
Last Updated : 29 Apr 2023 06:00 AM

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் | காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ராகுல் அழைப்பு: கமல்ஹாசன் தகவல்

கோவையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசினார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

கோவை: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

வரும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, கட்சியின் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது: ஜனநாயகத்தைப் பாதுகாக்க, கட்சியின் செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும். நிர்வாகிகளின் செயல்பாடுகள் அடிப்படையில் பொறுப்பும், அங்கீகாரமும் வழங்கப்படும்.

மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தெரிந்தது. வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேசத் தேவையில்லை. அதற்கு நேரம் இருக்கிறது. கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர்ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.

மேலும், கர்நாடக காங்கிரஸ் கட்சியிலிருந்தும் கடிதம் வந்துள்ளது. அங்கு பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து விரைவில்முடிவெடுக்கப்படும். இறையாண்மையைப் பாதுகாக்க யார் அழைத்தாலும் நான் செல்வேன்.

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை கட்சியினர் தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக, கட்சி நிர்வாகிகள் களப்பணி மேற்கொள்வது முக்கியம். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை, நிர்வாகிகளின் செயல்பாடுகள் சொல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘வரும்மக்களவைத் தேர்தலில் கோவைெதாகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுதான் இந்த ஆலோசனைக் கூட்டம். அரசியல் சாசனத்துக்கு ஆபத்து வரும்போது, அதைக் காப்பாற்ற கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டியது அனைவரின் கடமை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x