Published : 04 Sep 2017 08:37 AM
Last Updated : 04 Sep 2017 08:37 AM

திமுகவினர் நடத்தும் கல்லூரிகளில் மாணவி அனிதாவுக்கு இடம் அளித்திருக்கலாமே? - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் அனிதாவுக்கு இடம் அளித்து, அந்த உயிரை காப்பாற்றி இருக்கலாமே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவி அனிதாவின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம்தான் காரணம் என்பது தெரிந்தபோதும் உள்நோக்கத்தோடு தொடர்ந்து பிரதமர் மோடி விமர்சிக்கப்படுகிறார்.

திமுக கூட்டணியின் முக்கிய தலைவர் சிதம்பரத்தின் மனைவி தொடுத்த வழக்கினால்தான் மத்திய அரசு நீட் தேர்வுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைக்க முடியவில்லை.

நளினி சிதம்பரத்தை இவ்வழக்கை முன்னெடுக்க வேண்டாம் என ஸ்டாலின் கேட்டிருக்கலாமே.

கொடூர அரசியல்

ஸ்டாலின் நினைத்திருந்தால் திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் நடத்தும் மருத்துவ, பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏதோ ஒரு வகையில் உதவுவதாக உறுதி அளித்து மாணவி உயிரை காப்பாற்றி இருக்கலாமே.

அனிதாவின் மரணத்தை வைத்து கொடூர அரசியலை திமுக அரங்கேறி வருகிறது. ஸ்டாலின் சூளுரையை ஜனநாயக வழியில் தமிழக பாஜக எதிர்க்கொள்ளும்.

இவ்வாறு அறிக்கையில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x