Published : 23 Apr 2023 04:05 AM
Last Updated : 23 Apr 2023 04:05 AM
திருச்சி: அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி அதிமுக நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
ஓபிஎஸ் அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஏப்.24-ம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு திடல் பகுதி முழுவதும் அதிமுக கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால் அக்கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தி வரும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும்,
முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமையில் வடக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி, மாநில அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி, சிவபதி, பூனாட்சி, எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தலைமையிட துணை ஆணையர் சுரேஷ்குமாரிடம் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட துணை ஆணையர் சுரேஷ்குமார், இதுகுறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
வழக்கை சந்திக்க தயார்: இதனிடையே, மாநாடு ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் கூறியது: அதிமுக கொடியை பயன்படுத்துவதற்காக எங்கள் மீது யார் வழக்கு தொடுத்தாலும், அதைச் சந்திக்க நாங்கள் தயார். இந்த கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்கு இன்னும் முடியவில்லை. நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தீர்ப்பு வரட்டும். அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT