Published : 21 Apr 2023 09:18 PM
Last Updated : 21 Apr 2023 09:18 PM

‘தினமும் 12 மணி நேரம், 4 நாள் வேலை, 3 நாள் ஓய்வு’ - தமிழக அரசின் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ‘12 மணி நேர வேலை’ மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

12 மணி நேர வேலை மசோதா: தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார். | முழுமையாக வாசிக்க > 12 மணி நேர வேலை மசோதா: திமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி பேரவையில் நிறைவேற்றம்

4 நாள் வேலை, 3 நாள் ஓய்வு... தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சட்டம் குறித்து விளக்கினார். அப்போது அவர், "மின்னணுவியல் துறையில் (Electronics Industries) இருக்கக்கூடிய நிறுவனங்கள், Non leather shoe making என்று சொல்லக்கூடிய தோல் அல்லாத காலணிகள் உற்பத்திச் செய்யக்கூடிய தொழில்கள், Electronic clusters அல்லது மென்பொருள் துறை (Software) இவ்வாறான தொழில்களில் பணியாற்றக்கூடியவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில், அங்கு பணியாற்றுபவர்கள் விரும்பினால், இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம்.

இதனால், வாரத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் என்பது மாறாது. இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அந்நாட்களில் வேறு பணிகளையும் அவர்கள் பார்க்கலாம்.இன்றையச் சூழலில் மாறியிருக்கின்ற Working Condition-ல், இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்றாக இருக்கிறது" என்று அவர் கூறினார். | முழுமையாக வாசிக்க > 12 மணி நேர வேலை மசோதா யாருக்கெல்லாம் பொருந்தும்? - அமைச்சர் விளக்கம்

தொழிலாளர்களின் விருப்ப அடிப்படையில்தான்... - இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், இந்தச் சட்டத்திருத்தம் என்னவென்றால், எந்தவொரு தொழிற்சாலையாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை நேரம். அந்த நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதுதொடர்ந்து அப்படியேதான் இருக்கும். எல்லா நிறுவனங்களுக்கும் இந்தச் சட்டத் திருத்தம் பொருந்தாது. எந்த நிறுவனம், எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ, அந்த தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே, இந்த சட்டம் பொருந்தும் என்று அவர் கூறினார். | முழுமையாக வாசிக்க > ‘12 மணி வேலை நேர’ சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: தமிழக அரசு

முத்தரசன் காட்டம்: இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் அளித்துள்ள விளக்கம் தொழிலாளர்களை குழப்பும் நோக்கம் கொண்டதாகும். இச்சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. பேரவையில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து, அதனைத் திரும்பப் பெற வேண்டும்" என்று கூறியுள்ளார். | முழுமையாக வாசிக்க > பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியே தமிழ்நாடு திருத்தச் சட்டம்

மார்க்சிஸ்ட் கண்டனம்: 12 மணி நேர வேலை மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மசோதாவை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மை என்ற ஒன்றைச்சொல்லி அதை இல்லாமல் செய்வது தவறான நடவடிக்கை, தவறான முன்னுதாரணம்; மாற்ற முடியாத பழிச்சொல்லுக்கு அரசு ஆளாக நேரிடும். பாஜக ஏற்கெனவே கொண்டு வந்துள்ளதை அனைவரும் எதிர்த்துள்ளோம்.இந்தியாவிலேயே இந்த மசோதாவை பாஜக அல்லாத ஒரு மாநில அரசு கொண்டு வந்திருப்பது தமிழ்நாடு அரசுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார். | முழுமையாக வாசிக்க > வேலை நேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது; எதிர்ப்பை பதிவு செய்த கட்சிகளுக்கு பாராட்டு

அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு: இதுதொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே தினம் வரும் வேளையில், தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் செய்தியை வெளியிட வேண்டுமே தவிர தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுவது தமிழக அரசுக்கு உகந்ததல்ல. எனவே தமிழக அரசு, 12 மணி நேர வேலை சம்பந்தமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்று கூறியுள்ளார். | வாசிக்க > 12 மணி நேர வேலை மசோதா | “தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு இது

உழைப்புச் சுரண்டல்... - தொழிலாளர்கள் வேலைநேர மசோதா குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானதல்லவா? விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே" என்று தெரிவித்துள்ளார். | முழுமையாக வாசிக்க > விரும்பியோர் 12 மணி நேரம் உழைக்கலாம் என்பதும் ஒரு வகை உழைப்புச் சுரண்டலே

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x