Published : 21 Apr 2023 03:01 PM
Last Updated : 21 Apr 2023 03:01 PM

12 மணி நேர வேலை மசோதா | “தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு இது” - ஜி.கே.வாசன் விமர்சனம்

ஜி.கே.வாசன் | கோப்புப்படம்

சென்னை: "தொழிலாளர்களுக்கு எதிராக 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருப்பது நியாயமற்றது. இது தொழிலாளர் விரோதப் போக்கை எடுத்துக்காட்டுகிறது" என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் இன்று 12 மணி நேர வேலை சம்பந்தமாக மசோதா நிறைவேற்றப்பட்டது ஏற்புடையதல்ல. காரணம், தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி என்றால்தான் அவர்களின் உடல்நலனுக்கும் நல்லது, வேலையும் சுமுகமாக முடியும். அது மட்டுமல்ல 8 மணி நேர வேலை என்பதை உலக அளவில் தொழிலாளர்கள் போராடி பெற்றதால்தான் மே தினமே கொண்டாடப்படுகிறது. அதாவது தொழிலாளர்களின் வேலை, உழைப்பு, மன நலம் ஆகியவற்றிற்கு ஏற்ப வேலை நேரம் அமைய வேண்டும் என்பது தான் தொழிலாளர்களின் எண்ணமாகும்.

அப்படி இருக்கும் போது தொழிலாளர்களுக்கு எதிராக இம்மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருப்பது நியாயமற்றது. மேலும் பொது மக்களும் இந்த மசோதாவை எதிர்க்கின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சியினரையும் தாண்டி ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளே இந்த மசோதாவை எதிர்ப்பது ஆட்சியாளர்களின் தொழிலாளர் விரோதப் போக்கை எடுத்துக்காட்டுகிறது.

மே தினம் வரும் வேளையில், தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் செய்தியை வெளியிட வேண்டுமே தவிர தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுவது தமிழக அரசுக்கு உகந்ததல்ல. எனவே தமிழக அரசு, 12 மணி நேர வேலை சம்பந்தமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி வேலை நேர மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். | வாசிக்க > 12 மணி வேலை நேர மசோதா: திமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி பேரவையில் நிறைவேற்றம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x