Published : 18 Apr 2023 05:13 AM
Last Updated : 18 Apr 2023 05:13 AM

பதிவுத்துறை சேவைகளுக்கான முத்திரைத்தாள் மதிப்பில் மாற்றம் - சட்டப்பேரவையில் திருத்த மசோதா தாக்கல்

சென்னை: பதிவுத்துறை சேவைகளுக்கான முத்திரைத்தாளை உயர்மதிப்பாக மாற்றியும், சில சேவைகளுக்கு குறைத்தும் முத்திரை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 1899-ம் ஆண்டு இந்திய முத்திரை சட்டத்தில் மாநிலத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் நேற்று தமிழக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்தார்.இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் வி.பி.நாகை மாலி தெரிவித்தார். இருப்பினும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. பேரவை இறுதிநாளில் மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த மசோதா குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 1992-ம் ஆண்டு பதிவுத்துறை சேவைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட முத்திரைத்தாள் மதிப்பு தற்போதுதான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 என முத்திரைத்தாள் விற்பனைக்கு உள்ளன. முத்திரைத்தாளை பொறுத்தவரை ரூ.20 வரையிலான தாளுக்கு தமிழக அரசு அதைவிட அதிகமான தொகையை செலுத்தி ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறுகிறது.

இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் இழப்பை கணக்கிட்டு, அதை சரி செய்யும் வகையில், குறைந்த பட்ச முத்திரைத்தாள் மதிப்பு ரூ.100 ஆக இருக்கும் வகையில் மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. கடந்தாண்டு சட்டப்பேரவை கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தற்போது முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சில சேவைகளுக்கு முத்திரைத் தீர்வை குறைக்கப்படுகிறது. சில சேவைகளுக்கு முத்திரைத் தீர்வை அதிகரித்துள்ளது. அதாவது குடும்பம் என்பதில் இறந்தவர்களின் வாரிசு என்ற வகைப்பாடு சேர்க்கப்படுகிறது. இதனால் பாகப்பிரிவினை, பங்குதாரர் கலைப்பு இவற்றில் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவில் முத்திரைத் தீர்வை சலுகைகள் கிடைக்கும். விற்பனை ரத்து பதிவானது முன்பு வேறுவகையில் வகைப்படுத்தப்பட்டு 7 சதவீதம் முத்திரைத்தீர்வை செலுத்த வேண்டியிருந்தது. தற்போது ரூ.1000 என நிலை நிறுத்திய தொகையாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமோ பொது நிறுவனமோ பதிவு செய்யப்படும்போது அதற்கு ரூ.300 ஆக முத்திரைத்தீர்வை இருந்தது. ஆனால், மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் அதிகமாக உள்ளது. இதில் எந்த மாநிலத்தில் குறைவோ அதை தமிழகத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன்படி நிறுவனம் ஆரம்பிக்கும்போது செய்யப்படும் முதலீட்டில் 0.5 சதவீதம் முத்திரைத்தீர்வை வசூலிக்கப்படுகிறது.

இதுதவிர, தேர்தல் முதலானவற்றுக்கு வழங்கப்படும் உறுதி மொழி பத்திரம் முன்னதாக ரூ.20 முத்திரைத் தாளில் வாங்க வேண்டும். இது தற்போது ரூ.200 முத்திரைத்தாள் என்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு அசல் பத்திரத்துக்கான சான்றொப்பம் இடப்பட்ட நகல் பத்திரம் வாங்கும் போது, முன்பெல்லாம் ரூ.20 முத்திரைத்தாளில் வாங்கப்பட்டது. இனி ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் வாங்க வேண்டும். அதுபோல் சட்ட ஆவணத்துக்கான முத்திரைத்தாள் மதிப்பும் அதிகரித்துள்ளது. இனி,ரூ.100 முத்திரைத்தாளை பயன்படுத்தி மட்டுமே எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x