Published : 17 Apr 2023 07:17 AM
Last Updated : 17 Apr 2023 07:17 AM
சென்னை: ரயில் பெட்டிகளின் உள்பகுதியில் மட்டுமல்லாமல், அதன் நுழைவு பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்களை தடுக்கவும் ரயில் நிலையங்கள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்பொருத்தி கண்காணிக்கப்படுகின்றன.
இதுதவிர, ரயில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. தற்போது, நாடு முழுவதும் உள்ள 16 ரயில்வே மண்டலங்களில் 6,646 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில், தெற்கு ரயில்வேயில் 759 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ரயில் பெட்டிகளில் உள்பகுதியில் மட்டுமல்லாமல், பெட்டியின் நுழைவு வாயிலில், அதாவது இரு பக்கமும் கதவுபகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 518 எல்.எச்.பி பெட்டிகள், 144 மெமு பெட்டிகள், 81 மின்சார ரயில் பெட்டிகள், 16 வந்தே பாரத் பெட்டிகள் என 759 பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.படிப்படியாக மற்ற ரயில் பெட்டிகளிலும் கேமராக்கள் பொருத்த உள்ளோம். மேலும், ரயில் பெட்டிகளில் நுழைவு பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்த திட்டமிட்டு உள்ளோம்.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த கேமராக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, வெளி பகுதிகளில் இருந்து கல்வீச்சு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.மேலும், ரயிலில் நடைபெறும் திருட்டு உள்பட பல்வேறு குற்றங்களை அடையாளம் காணமுடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT