Last Updated : 12 Apr, 2023 07:02 PM

 

Published : 12 Apr 2023 07:02 PM
Last Updated : 12 Apr 2023 07:02 PM

அமைச்சர் குறித்து அவதூறு கருத்து: கோவையில் பாஜக மாநில நிர்வாகி செல்வகுமார் கைது

கைது செய்யப்பட்ட செல்வகுமார் (இடது) , கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் (வலது).

கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக, கோவை பாஜக மாநில நிர்வாகி செல்வகுமாரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

கோவை காளபட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (42). இவர், பாஜக மாநில தொழில் துறைப் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பாக அவதூறான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை கணபதி புதூரைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ்குமார் (54) என்பவர் கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், ‘மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறாக கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. அதன் பேரில், மாநகர சைபர் க்ரைம் போலீஸார் அவதூறாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து செல்வகுமாரை இன்று (ஏப்.12) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செல்வகுமார், ஜே.எம்.4-வது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை வரும் 26-ம் தேதி வரை சிறையில் அடைக்க, மாஜிஸ்திரேட் சரவணபாபு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘ அவதூறாக பேசியதாக கிடைக்கப் பெற்ற புகாரின் பேரில் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மோசடி வழக்கு உள்ளதாகத் தெரிகிறது. அது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.

இதற்கிடையே, பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த கோவை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள், மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் காவல் துறையினரின் செயல்பாடுகளை கண்டித்தனர்.

அண்ணாமலை கண்டனம் : கைது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ தமிழக பாஜக தொழில் துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வக்குமாரை கைது செய்துள்ள திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திமுக அரசு. இதற்கொல்லாம் அஞ்சுபவர்கள் இல்லை பாஜக தொண்டர்கள்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x