Published : 11 Apr 2023 05:50 AM
Last Updated : 11 Apr 2023 05:50 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:
தமிழ்நாட்டின் பதிவுத் துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. பத்திரம் பதிவு செய்ய வருபவர் 70 வயதைக் கடந்தவராக இருந்தால், அவரைக் காத்திருக்க வைக்காமல், உடனடியாக பத்திரப் பதிவை மேற்கொள்ளும் திட்டத்துக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் வழிகாட்டி மதிப்பைக் குறைத்து, பதிவுக் கட்டணத்தை அதிகரித்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும், வெளிச்சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பை பிரதிபலிக்காததால், வங்கிகளில் கடன் பெற முடியாமல் நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர். இதனால் இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வந்தன. அதனடிப்படையில்தான் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டு, பதிவுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், சீரான வழிகாட்டி மதிப்பை உருவாக்குவதற்காக சிறப்பு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
ஆவணங்கள் பதிவில் இணையதள சேவை அதிகமாகியுள்ளது. தற்போது செயல்படுத்தப்படும் ஸ்டார் 2.0 திட்டத்துக்கான சர்வரின் வேகம் குறைவாக உள்ளது. எனவே, இணையதள வேகத்தை அதிகரிப்பதற்காக ஸ்டார் 3.0 திட்டம் ரூ.328 கோடியில் உருவாக்கப்படும்.
சென்னை, மதுரை, கோவையில் அதிக எண்ணிக்கையில் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதால், அங்குள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் முன்னணி அலுவலகங்களாக மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT